கர்நாடகாவில் காங்கிரஸ் அமோக வெற்றிபெற்றிருக்கிறது. வியாழக்கிழமை புதிய முதல்வர் பொறுப்பேற்பார் எனக் காங்கிரஸ் வட்டாரத்தில் பேசப்படும் நிலையில், சித்தராமையா – டிகே சிவக்குமார் இருவரில் யார் முதல்வர் எனும் அறிவிப்பு இன்னும் உறுதிப்படுத்தப்படாமல் இருக்கிறது. இதற்கு முன்னர் காங்கிரஸ் பிரசாரத்தின் போது, காங்கிரஸ் ஆட்சிக்கு வந்தால் 200 யூனிட் மின்சாரம் இலவசமாக வழங்கப்படும் என வாக்குறுதி அறிவித்திருந்தது.
இந்த நிலையில், கர்நாடக மாநிலம் சித்ரதுர்கா மாவட்டத்தின் ஜலிகட்டே என்ற கிராமத்துக்கு மின்துறை ஊழியர்கள் மின் கணக்கெடுப்புக்குச் சென்றிருக்கிறார்கள். அவர்களைத் தடுத்த கிராம மக்கள், காங்கிரஸ் கட்சி தேர்தலில் வெற்றி பெற்றதால், இப்போதிலிருந்தே மின் கட்டணம் செலுத்த மாட்டோம் என்று அப்பகுதி மக்கள் கூறியுள்ளனர். அதற்கு மின்சாரத்துறை ஊழியர்கள்,”காங்கிரஸ் கட்சி வெற்றி பெற்றதெல்லாம் உண்மை என்றாலும், இன்னும் அரசே அமைக்கவில்லை.
அரசு அமைந்த பிறகு 200 யூனிட் இலவச மின்சாரம் தொடர்பாக புதிய அரசு ஆணை வெளியிடுவர். அதன் பிறகு தான் இலவச மின்சாரம் கிடைக்கும். இப்போது மின்சாரத்திற்குக் கட்டணம் செலுத்த வேண்டும்” என எவ்வளவோ எடுத்துச் சொல்லியும் கிராம மக்கள் கேட்கவில்லை. மேலும், மின்சார கணக்கெடுக்கும் பணி செய்ய அனுமதிக்கவில்லை எனக் கூறப்படுகிறது. இது தொடர்பான வீடியோ சமூக வலைதளங்களில் வேகமாகப் பரவி வருகிறது.