நாட்டின் முதல் குடிமகன் என்று அழைக்கப்படும் குடியரசு தலைவர் பதவியை அலங்கரிப்பது தனிச் சிறப்பாக பார்க்கப்படுகிறது. தற்போது அந்த இடத்தில் திரவுபதி முர்மு இருக்கிறார். இவருக்கு ஒதுக்கப்பட்ட மாளிகையை ராஷ்டிரபதி பவன் (Rashtrapati Bhavan) என்று அழைக்கின்றனர். இது மிகச்சிறந்த கட்டிடக் கலைக்கு உதாரணமாக அற்புதமான வடிவமைப்புடன் காணப்படுகிறது.
ராஷ்டிரபதி பவன் ஸ்பெஷல்
இது ஆங்கிலேயர் ஆட்சியில் கட்டப்பட்டு 1931ல் திறந்து வைக்கப்பட்டது. இதை வடிவமைத்த பொறியாளர்கள் சர் எட்வின் லுட்யென்ஸ், ஹெர்பெர்ட் பேக்கர் ஆகியோர் ஆவர். ‘H’ வடிவிலான கட்டிட அமைப்பை சுமார் 5 ஏக்கரில் உருவாக்கியவர் சர் லுட்யென்ஸ். இதில் மொத்தம் 4 தளங்கள் இருக்கின்றன. 340 அறைகள், 2.5 கிலோமீட்டர் நீள தாழ்வாரம், 190 ஏக்கர் தோட்டம் என பிரம்மாண்டமாக விரிந்து காணப்படுகிறது.
முன்பதிவு செய்யும் வசதி
குடியரசு தலைவர் மாளிகையை சுற்றி பார்க்க மூன்று படிநிலைகளாக அனுமதி அளிக்கப்படுகிறது. இதற்காக http://rashtrapatisachivalaya.gov.in/rbtour என்ற அதிகாரப்பூர்வ இணையதளத்திற்கு சென்று முன்பதிவு செய்து கொள்ளலாம். குடியரசு தலைவர் மாளிகையின் பிரிவு ஒன்றில் முதன்மை கட்டிடம், குடியரசு தலைவர் மாளிகையின் புல்வெளி பரப்பு, அசோக் ஹால், தர்பார் ஹால், பான்குயட் ஹால், ட்ராயிங் அறை உள்ளிட்ட பிரீமியம் அறைகளை பார்க்கலாம்.
என்னென்ன சிறப்புகள்
பிரிவு இரண்டில் குடியரசு தலைவர் அருங்காட்சியக வளாகம் இடம்பெற்றுள்ளது. பிரிவு மூன்றில் குடியரசு தலைவர் மாளிகையின் அமிரித் உதயான், ஹெர்பல் கார்டன், மியூசிகல் கார்டன், ஸ்பிரிச்சுவல் கார்டன் ஆகிய நான்கு புகழ்பெற்ற கார்டன்களை பார்வையிடலாம். இதில் பிரிவு மூன்றில் உள்ள பகுதிகளை ஆண்டுதோறும் நடைபெறும் உதயான் உத்சவ் (Udyan Utsav) எனப்படும் சிறப்பு நிகழ்வின் போது மட்டும் பார்க்க முடியும்.
வாரத்தில் 6 நாட்கள் அனுமதி
தற்போது பிரிவு ஒன்றில் உள்ள பகுதிகளை வாரந்தோறும் புதன்கிழமை முதல் ஞாயிறு வரை 5 நாட்கள் மட்டும் பார்க்கும் வகையில் அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் குடியரசு தலைவரின் செயலாளர் வெளியிட்டுள்ள அறிவிப்பில், இனிமேல் வாரந்தோறும் செவ்வாய் கிழமை முதல் ஞாயிறு வரை 6 நாட்கள் பொதுமக்கள் பார்வையிடலாம். அரசு விடுமுறை நாட்களை தவிர்த்து எனக் கூறப்பட்டுள்ளது.
வெளியான மகிழ்ச்சி அறிவிப்பு
ஒவ்வொரு சனிக்கிழமை அன்றும் குடியரசு தலைவர் மாளிகையின் பாதுகாப்பு வீரர்களின் சிறப்பு அணிவகுப்பு நடைபெறும். இதை காலை 8 மணி முதல் 9 மணி வரை கண்டு ரசிக்கலாம். ஒருவேளை சனிக்கிழமை அரசு விடுமுறையாக இருந்தால் அணிவகுப்பை பார்க்க முடியாது எனக் கூறப்பட்டுள்ளது. வாரத்தில் 6 நாட்கள் குடியரசு தலைவர் மாளிகையை சுற்றி பார்க்கலாம் என்ற அறிவிப்பால் பொதுமக்களும், சுற்றுலா பயணிகளும் மிகுந்த மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.