கூகுள் அதிரடி அறிவிப்பு
கூகுள் நிறுவனம் புதிய பார்மேட்டில் பயணிக்க தொடங்கியிருக்கிறது. குறிப்பாக கூகுள் பார்ட் ஏஐ அறிமுகத்துக்குப் பிறகு சில அதிரடி நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. கூகுளின் செயல்திறனை அதிகப்படுத்தும் நோக்கில் எடுக்கப்பட்டிருக்கும் நடவடிக்கையில் கூகுள் யூசர்களுக்கும் ஒரு வார்னிங் விடுக்கப்பட்டிருக்கிறது. பாதுகாப்பு அம்சங்களை மேம்படுத்தும் வகையில், ஜிமெயில், டிரைவ், மீட், யூடியூப் மற்றும் கூகுள் புகைப்படங்கள் உள்ளிட்ட கணக்குகளில் களையெடுப்பை நடத்த உள்ளதாக கூறியுள்ளது.
யூசர்கள் நீக்கம்
சோஷியல் மீடியாவில் வெளியிட்டிருக்கும் அந்த அறிவிப்பில், நீண்டகாலமாக பயன்படுத்தாமல் இருக்கும் கூகுள் கணக்குகள், அதாவது குறைந்தபட்சம் 2 ஆண்டுகளுக்கும் மேல் பயன்படுத்தாமல் இருக்கும் கணக்குகளை நிரந்தரமாக நீக்கம் செய்ய முடிவெடுத்துள்ளது. அவை கவனிக்கப்படாத கணக்குகள் அல்லது பாஸ்வேர்டு மறந்த கணக்குகளாக தேங்கிக் கிடப்பதால் அவற்றை நீக்கம் செய்ய திட்டமிட்டுள்ளது. ஒருவேளை வாடிக்கையாளர்களுக்கு அந்த கணக்குகள் தேவை என்றால், தாங்கள் பயன்படுத்தாமல் இருக்கும் கணக்குகளுக்கு சென்று அப்டேட் செய்து கொள்ளுமாறு கூகுள் நிறுவனம் அறிவுறுத்தியுள்ளது.
கூகுள் நிறுவனம் சொல்வது என்ன?
இது குறித்து கூகுள் நிறுவனம் வெளியிட்டிருக்கும் அறிவிப்பில் செயல்பாட்டில் இருக்கும் கூகுள் கணக்குகளைவிட 10 மடங்கிற்கும் அதிகமான கூகுள் கணக்குகள் கைவிடப்பட்டவையாக இருப்பதாக தெரிவித்துள்ளது. இது தேவையற்ற அல்லது எளிதில் ஹேக்கர்களால் உபயோகப்படுத்தக்கூடிய கணக்குகளாக இருப்பதால், பாதுகாப்பு முன்னெச்சரிக்கைகளைக் கொண்டு இவற்றை நீக்கம் செய்ய திட்டமிட்டிருக்கிறது. ஹேக்கர்கள் மற்றும் ஸ்கேமர்கள் இத்தகைய கணக்குகளை குறிவைத்து மோசடிக்காக தங்களுக்கு சாதகமாக பயன்படுத்திக் கொள்வதால், இத்தகைய முடிவை கூகுள் நிறுவனம் எடுத்துள்ளது. மேலும், கைவிடப்பட்ட கணக்குகளில் இருந்து ஒருவரின் அடையாள திருட்டு உள்ளிட்டவை செய்யப்படவும் வாய்ப்பு இருக்கிறது. இணையக் குற்றங்களை தடுக்கும் பொருட்டு கூகுள் கைவிடப்பட்ட கணக்குகளை நீக்குகிறது.
யூசர்கள் என்ன செய்ய வேண்டும்?
ஒருவேளை உங்களுக்கும் கூகுள் கணக்கு இருந்து அதனை இரண்டு ஆண்டுகளுக்கும் மேல் உபயோகப்படுத்தாமல் இருந்தால் அந்த கணக்கு நீக்கப்பட வாய்ப்பு இருக்கிறது. அதில் இருந்து நீங்கள் தப்பிக்கவும், உங்களின் கணக்கு மீண்டும் உபயோகத்தில் இருக்க வேண்டும் என்ற நினைத்தால் அதற்கான வழிமுறைகளை கூகுள் நிறுவனம் வெளியிட்டிருக்கிறது. நீண்ட நாட்களாக பயன்படுத்தாமல் இருக்கும் கூகுள் கணக்குக்கு சென்று மீண்டும் லாகின் செய்து உபயோகப்படுத்துங்கள். உதாரணமாக ஜிமெயில் என்றால் அதனை ஓபன் செய்து இமெயில் படியுங்கள் அல்லது அனுப்புங்கள். யூடியூப்பில் வீடியோ பாருங்கள், பிளே ஸ்டோரில் செயலியை பதவிறக்கம் செய்யுங்கள். இப்படி ஏதேனும் ஒரு செயலை அந்த கணக்கின் வழியே செய்தால் உங்கள் கணக்கு நீக்கப்படாது.
யாருக்கு இது பொருந்தும்?
தனிப்பட்ட யூசர்களுக்கு மட்டுமே இந்த புதிய அப்டேட் பொருந்தும் என தெரிவித்திருக்கும் கூகுள் நிறுவனம், பள்ளி மற்றும் வணிக நிறுவனங்களுக்கு இந்த அறிவிப்பு பொருந்தாது என விளக்கமளித்திருக்கிறது. வரும் டிசம்பர் மாதம் முதல் இந்த கைவிடப்பட்ட கணக்குகளின் களையெடுப்பு பணிகளை கூகுள் நிறுவனம் தொடங்க இருக்கிறது. அதற்கு முன்பாக யூசர்களுக்கு அறிவிப்புகள் வரும். அதனை கவனிக்கப்படவில்லை என்றால் மட்டுமே கணக்குகள் நிரந்தரமாக நீக்கப்படும்.