திருவனந்தபுரம்,
கேரளாவின் கொல்லம் மாவட்டத்தில் கொட்டரக்காரா பகுதியில் அரசு மருத்துவமனை ஒன்றில் டாக்டராக வந்தனா தாஸ் (வயது 22) என்பவர் பணியாற்றி வந்தார். இந்நிலையில், சிகிச்சைக்காக வந்த நபர் ஒருவருக்கு பெண் டாக்டர் சிகிச்சை அளித்து கொண்டிருந்தபோது, அந்த நபர் திடீரென டாக்டரை கத்தியால் குத்தி கொலை செய்தார். .
இந்த சம்பவத்தில், போலீசார் உள்பட பலர் மீதும் அந்த நோயாளி தாக்குதல் நடத்தினார். இதில் பலர் காயமடைந்தனர். இந்த சம்பவம் நாடு முழுவதும் பரபரப்பை ஏற்படுத்தியது. டாக்டர்களை பாதுகாக்க முடியாவிட்டால், மருத்துவமனைகளை மூடுங்கள் என்று இந்த சம்பவத்திற்கு கேரள ஐகோர்ட்டு கடும் கண்டனம் தெரிவித்தது.
இந்த சம்பவத்தில் போராட்டம் நடத்த வரும்படி, டாக்டர்கள் உள்ளிட்டோருக்கு இந்திய மருத்துவ கூட்டமைப்பு அழைப்பு விடுத்தது. இதுபற்றி வெளியிடப்பட்ட அதன் அறிக்கையில், சம்பவத்திற்கு வருத்தம் தெரிவித்ததுடன் கண்டனமும் வெளியிட்டது. இதேபோன்று, பணியிடங்களில் சுகாதார நலம் சார்ந்த பணியாளர்களுக்கு எதிரான வன்முறையை தடுக்கும் வகையில் மத்திய அரசின் சட்டங்கள் மற்றும் நடைமுறைகள் அமல்படுத்த வேண்டும் என்று கோரிக்கை விடுத்து, மருத்துவமனைகளை பாதுகாப்பு மண்டலங்களாக அறிவிக்கவும் கோரிக்கை விடுத்திருந்தது.
இதனைத்தொடர்ந்து சுகாதாரப் பணியாளர்களின் பாதுகாப்பை உறுதி செய்வதற்காக மருத்துவமனை பாதுகாப்பு மசோதாவில் தேவையான திருத்தங்களைச் செய்ய அரசாங்கம் முடிவு செய்துள்ளதாக கேரள முதல்-மந்திரி பினராயி விஜயன் தெரிவித்திருந்தார்.
இந்நிலையில் கேரளாவில் மருத்துவமனை பாதுகாப்பு சட்ட திருத்தம் தொடர்பான அவசர சட்டத்திற்கு அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது. முதல்-மந்திரி பினராயி விஜயன் தலைமையில் நடைபெற்ற அமைச்சரவை கூட்டத்தில் இதற்கான ஒப்புதல் அளிக்கப்பட்டது. இதன்படி மருத்துவமனை ஊழியர்களை தாக்கினால் 7 ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கும் வகையில் சட்டதிருத்தம் செய்யப்படுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.