சென்னை: கொளுத்தும் கோடை வெயிலால் ஏற்படும் பாதிப்புகளை எதிர்கொள்ள என்ன செய்ய வேண்டும் என்பது பற்றி தலைமைச் செயலாளர் இறையன்பு ஐ.ஏ.எஸ். தலைமையில் பரபரப்பு ஆலோசனை நடைபெற்றது.
அதில் சிறிய குழந்தைகள், கர்பிணிகள், முதியோர்கள் நண்பகல் 12 மணி முதல் மாலை 3 மணி வரை வெளியே செல்வதை தவிர்க்க வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு முடிவுகள் எடுக்கப்பட்டன.
தமிழ்நாட்டில் நிலவிவரும் கோடை வெப்பத்தினால் ஏற்படும் பாதிப்புகளை எதிர்கொள்ள, மேற்கொள்ளப்பட வேண்டிய உடனடி நடவடிக்கைகள் குறித்தும், பொதுமக்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட வேண்டியதன் அவசியம் குறித்தும் பல்வேறு துறை அரசு செயலாளர்களுடனான ஆய்வுக் கூட்டம் தலைமைச் செயலகத்டில் நடைபெற்றது.
அதில் வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத் துறை, தொழில் துறை, தொழிலாளர் நலன் மற்றும் திறன் மேம்பாட்டுத் துறை, மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத் துறை, நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறை, பள்ளிக்கல்வி துறை, ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித் துறை, தமிழ் வளர்ச்சி மற்றும் செய்தித்துறை செயலாளர்கள், பெருநகர சென்னை மாநகராட்சி ஆணையர் மற்றும் மேற்கண்ட துறை அலுவலர்கள் கலந்து கொண்டனர்.
வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத் துறை மூலம் வழங்கப்பட்ட அறிவுரைகளை கூடுதல் தலைமைச் செயலாளர் மற்றும் வருவாய் துறை ஆணையர் திரு.எஸ்.கே.பிரபாகர், இ.ஆ.ப.பின்வருமாறு எடுத்துரைத்தார்.
கோடைகால கடுமையான வெப்பத்தினால் ஏற்படும் பாதிப்புகளை தடுக்க
செய்ய வேண்டியவை:
உடலின் நீர்ச்சத்து குறையாமல் பராமரிக்க, தேவையான அளவு தண்ணீர் குடிக்கவும்.
அவசியமான பணிகளுக்கு வீட்டை விட்டு வெளியே செல்லும்போது குடிநீரை கையுடன் எடுத்துச் செல்லுங்கள்.
ஓ.ஆர்.எஸ் (ORS), எலுமிச்சை ஜூஸ், இளநீர், மோர் மற்றும் பழச்சாறுகள் குடிக்கவும்.
இந்த பருவகாலத்தில் கிடைக்கும் பழங்கள், காய்கறிகள் மற்றும் வீட்டில் சமைத்த உணவை உண்ணுங்கள்.
நல்ல காற்றோட்டம் உள்ள மற்றும் வெப்பம் தணிந்த இடங்களில் இருக்கவும்.
மெல்லிய, தளர்வான பருத்தி ஆடைகளை அணியவும்.
வெளியில் செல்லும் போது காலணிகளை அணியவும்.
மதிய நேரத்தில் வெளியே செல்லும் போது குடை கொண்டு செல்லவும்.
உடல் சோர்வாகவோ, மயக்கமாகவோ உணரும் பொழுது உடனடியாக மருத்துவ ஆலோசனை பெறவும்.

செய்யக் கூடாதவை:
வெயில் காலங்களில் வெறுங்காலுடன் வெளியே செல்லாதீர்கள்.
சிறிய குழந்தைகள், கர்பிணிகள், முதியோர்கள் அதிக வெப்பத்தில், மதிய வேளையில் (12 மணி முதல் 3 மணி வரை) வெளியே செல்வதை தவிர்க்கவும்.