தூத்துக்குடி துப்பாக்கிச் சூடு வழக்கில் அப்போதைய முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி என்ன செய்தார்? என்று அமைச்சர் செஞ்சி மஸ்தான் கேள்வி எழுப்பியுள்ளார்.
சமூக விரோதிகள் இடத்தை மாற்றிக் கொள்வார்களே தவிர தொழிலை மாற்ற மாட்டார்கள். கள்ளச்சாராய வழக்கில் தொடர்புடையவர்கள் மீது குண்டர் சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகவும் அமைச்சர் செஞ்சி மஸ்தான் தெரிவித்தார்.
இன்று செய்தியாளர்களை சந்தித்த சிறுபான்மையினர் நலத்துறை அமைச்சர் செஞ்சி மஸ்தானிடம், எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிச்சாமி எழுப்பிய கேள்விகளுக்கு பதில் அளித்தார்.
அதில், “எல்லா காலத்திலும், எல்லா நேரத்திலும் சமூக விரோதிகள் யாராக இருந்தாலும் சரி, இடம் மாற்றிக் கொள்வார்களே தவிர, ஒருபோதும் அவர்களின் தொழிலை மாற்றிக் கொள்ள மாட்டார்கள்.
அதற்காகத்தான் கடுமையான நடவடிக்கை எடுக்கப்பட்டு, அவர்களை குண்டர் சட்டத்தில் கைது செய்துள்ளோம். நாங்கள் யாரையும் பாகுபாடு பார்த்து நடவடிக்கை எடுப்பதில்லை.
உயிரிழப்புகள் அனைத்து ஆட்சிகளுமே நடைபெறுவது வழக்கம் தான். அப்போது, ஆளுங்கட்சி மீது எதிர் கட்சிகள் குற்றம் சொல்வார்கள் தான்.
ஆனால், கடந்த ஆட்சி காலத்தில் ஸ்டெர்லைட் போராட்டத்தின் போது பத்து பேரை சுட்டுக் கொன்றார்கள். அப்போதைய முதலமைச்சராக இருந்த எடப்பாடி பழனிச்சாமி நேரில் பார்க்க கூட செல்லவில்லை. ஆனால் தற்போதைய நமது முதலமைச்சர் மு க ஸ்டாலின் மக்களை நேரில் சந்திக்கிறார். சம்பவம் நடந்தால் இடத்திற்கு நேரடியாக செல்கிறார்” என்றார் அமைச்சர் செஞ்சி மஸ்தான்.