இலங்கையின் கடன் மறுசீரமைப்பை எளிதாக்கும் வகையில், இந்தியா மற்றும் பெரிஸ் கிளப் ஆகியவற்றால் அமைக்கப்பட்ட கடன் வழங்குனர் பேச்சுவார்த்தைகளுக்கான பொதுவான கட்டமைப்பில் சீனா ஒரு முறையான பங்கை வகிக்க வேண்டும் என்று அமெரிக்கா கோரியுள்ளது.
இலங்கை பொருளாதாரம் எதிர்கொண்ட நெருக்கடி
எழுபது ஆண்டுக்களுக்கு மேலாக இலங்கையின் பொருளாதாரம் மோசமான நிதி நெருக்கடியை எதிர்கொண்ட நிலையில், கடந்த ஏப்ரலில் நாடு, தமது வரலாற்றில் முதல் தடவையாக வெளிநாட்டுக் கடனைத் திருப்பிச் செலுத்தவில்லை.
இதன்போது முக்கிய கடன் வழங்குனர் நாடுகளான ஜப்பான், பிரான்ஸ் மற்றும் இந்தியாவுடன் இணைந்து கடந்த மாதம், இலங்கையின் கடனை மறுசீரமைப்பது பற்றி விவாதிக்கவும் ஒருங்கிணைக்கவும் பொதுவான கட்டமைப்பை அமைத்தது.
இதனையடுத்து, இலங்கையின் மிகப் பெரிய இருதரப்பு கடன் வழங்குநரான சீனா, கடந்த மே மாதத்தின் முற்பகுதியில், குறித்த கட்டமைப்பின் முதல் இணையத்தளக்கூட்டத்தில் பார்வையாளராகப் பங்கேற்றது.
கடன் மறுசீரமைப்பு விதிமுறை
இந்தநிலையில், பேச்சுவார்த்தையில் பங்கேற்பது என்பது கடன் மறுசீரமைப்பு விதிமுறைகளின்படி நடப்பதை உறுதி செய்வதற்கு முக்கியமானது என்று அமெரிக்காவின் தெற்கு மற்றும் மத்திய ஆசிய விவகாரங்களுக்கான பணியக துணை உதவிச் செயலர் அஃப்ரீன் அக்தர் கூறியுள்ளார்.
எனவே கடன் வழங்குநர் ஒருங்கிணைப்பாளர் தளத்தில் சீனா ஒரு முறையான பாத்திரத்தை வகிக்க வேண்டும் என்று தாம் கோருவதாகவும் அஃப்ரீன் அக்தர் தெரிவித்துள்ளார்.
இலங்கை அதன் கடன்கொடுனர் நாடுகளுக்கு 7.1 பில்லியன் டொலர்கள் கடன்பட்டுள்ளது. இதில் சீனாவிற்கு 3 பில்லியன், இந்தியாவிற்கு 1.6 பில்லியன் மற்றும் பெரீஸ் கிளப் நாடுகளுக்கு 2.4 பில்லியன் டொலர்களை செலுத்தவேண்டியுள்ளது.