செந்தில் பாலாஜியை அமைச்சர் பதவியில் இருந்து தூக்க வேண்டும் என அண்ணாமலை தெரிவித்துள்ளார்.
செய்தியாளர்களிடம் Sorry சொன்ன அண்ணாமலை
வருகிற 2024ம் ஆண்டு நாடாளுமன்ற தேர்தல் நடைபெற உள்ளது. இரண்டு முறை ஆட்சி அமைத்த பாஜக, தொடர்ந்து மூன்றாவது முறையும் ஆட்சி அமைக்க பல்வேறு வியூகங்களை வகுத்து வருகிறது. அந்தவகையில் தங்களுக்கு எதிராக உள்ள மாநில கட்சிகள் மீது குறி வைத்து மத்திய புலனாய்வு அமைப்புகளை ஏவி விடுவதாக எதிர்கட்சிகள் குற்றம்சாட்டி வருகின்றன. இந்தநிலையில் தமிழக அரசின் முக்கிய அமைச்சர் செந்தில் பாலாஜியை பாஜக குறிவைத்துள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.
கடந்த 2014 அதிமுக ஆட்சியில் அப்போதைய போக்குவரத்துத் துறை அமைச்சராக இருந்த செந்தில்பாலாஜி, தனது துறையில் வேலை வாங்கி தருவதாக கூறி, பலரிடம் இருந்து லஞ்சம் வாங்கியதாக குற்றச்சாட்டு இருந்தது. இந்தநிலையில் செந்தில்பாலாஜி திமுகவில் இணைந்து தற்போது அமைச்சராகி உள்ளார். இருப்பினும் 2014ல் அவர் வாங்கிய லஞ்சம் குறித்து வழக்கு தொடரப்பட்டது.
அமைச்சரான உடனேயே இந்த சிக்கலா என்ற உணர்ந்த அமைச்சர் செந்தில்பாலாஜி, லஞ்சமாக பெறப்பட்ட பணத்தை ஏமாந்தவர்களிடம் திருப்பி கொடுத்ததாக கூறி, சென்னை உயர்நீதிமன்றத்தில் கூறியதை அடுத்து அவர் மீது நடவடிக்கை எடுக்கப்படாமல் இருந்தது. இருப்பினும் அமைச்சர் செந்தில் பாலாஜியை தூக்க பல்வேறு வகைகளில் தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை முயன்று வருவதாக கூறப்படுகிறது.
இந்தநிலையில் செந்தில் பாலாஜி வழக்கில் இன்று உச்சநீதிமன்றம் பரபரப்பு உத்தரவு ஒன்றை வெளியிட்டுள்ளது. போக்குவரத்துத் துறையில் வேலை வாங்கித் தருவதாகக் கூறி லஞ்சம் வாங்கியதாக அமலாக்கத் துறை தொடர்ந்த மேல் முறையீட்டு மனு வழக்கில், அமைச்சர் செந்தில்பாலாஜி மீது ஊழல் தடுப்புச் சட்டத்தின் கீழ் வழக்கு தொடர்ந்து, இரண்டு மாதங்களில் விசாரணை நடத்தி முடிக்க வேண்டும் என்று தமிழக காவல் துறைக்கு உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
அதைத் தொடர்ந்து தமிழ்நாடு காவல்துறை விசாரணை நடத்தினால், அமைச்சராக இருக்கும் செந்தில் பாலாஜி தனது அதிகாரத்தை பயன்படுத்தி தப்பிக்க கூடும் எனவும், விசாரணை நேர்மையாக நடைபெறாது எனவும் எனவே அவரை பதவியில் இருந்து தூக்க வேண்டும் எனவும் தமிழக அரசுக்கு அண்ணாமலை கோரிக்கை விடுத்துள்ளார்.
இன்னும் இரண்டு மாதங்களில் விசாரணை நடத்தி அறிக்கை வெளியிட வேண்டும் என உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ள நிலையில், இது முழுக்க முழுக்க டெல்லியின் மாஸ்டர் பிளான் என்கிறார்கள் விவரம் அறிந்தவர்கள். தமிழக அமைச்சர்களில் முக்கியத்துவம் வாய்ந்த மற்றும் முதல்வர் ஸ்டாலினின் நம்பிக்கை பெற்ற உடன்பிறப்பு செந்தில் பாலாஜியை வைத்து காய் நகர்த்தி திமுகவின் செல்வாக்கை தமிழகத்தில் நீர்த்து போகச் செய்யவே இத்தகைய நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படுவதாக கூறப்படுகிறது.