சிட்னி,
நடப்பாண்டுக்கான ஜி7 உச்சி மாநாடு ஜப்பானில் நடைபெற உள்ளது. மே-19ந்தேதி முதல் 21-ந்தேதி வரை ஹிரோஷிமாவில் நடைபெறும் ஜி7 தலைவர்களின் உச்சி மாநாட்டில் அமெரிக்க அதிபர் பைடன் கலந்து கொள்வார் என வெள்ளை மாளிகை அதிகாரப்பூர்வமாக அறிவித்தது.
இதனைத் தொடர்ந்து மே 24-ந்தேதி ஆஸ்திரேலியாவின் சிட்னியில் நடைபெறவுள்ள 3-வது குவாட் தலைவர்கள் உச்சி மாநாட்டிலும் ஜோ பைடன் பங்கேற்பார் என வெள்ளை மாளிகை அறிவித்திருந்தது. குவாட் உச்சி மாநாட்டின்போது பிரதமர் மோடி, ஜப்பான் பிரதமர் புமியோ கிஷிடா மற்றும் ஆஸ்திரேலிய பிரதமர் அந்தோனி அல்பானீஸ் ஆகியோரை அதிபர் பைடன் சந்திப்பார் என கூறப்பட்டிருந்தது.
இந்த சூழலில் ஜோ பைடனின் ஆஸ்திரேலிய பயணம் ஒத்திவைக்கப்படுவதாக வெள்ளை மாளிகை அறிவித்தது. ஜி7 மாநாட்டில் கலந்து கொண்ட பிறகு வரும் ஞாயிற்றுக்கிழமை ஜோ பைடன் அமெரிக்கா திரும்புவார் என்றும், இது தொடர்பாக ஆஸ்திரேலிய பிரதமரிடம் தகவல் தெரிவிக்கப்பட்டதாகவும் கூறப்பட்டிருந்தது.
அமெரிக்காவில் நிலவி வரும் கடன் உச்சவரம்பு நெருக்கடி தொடர்பான முக்கிய ஆலோசனைகளை மேற்கொள்வதற்காக ஜோ பைடன் தனது ஆஸ்திரேலிய பயணத்தை ரத்து செய்திருப்பதாக தகவல் வெளியாகி இருந்தது.
இந்நிலையில் ஜோ பைடனின் ஆஸ்திரேலிய பயணம் ரத்து செய்யப்பட்டதைத் தொடர்ந்து சிட்னியில் நடக்க உள்ள குவாட் சந்திப்பை ஆஸ்திரேலியா ரத்து செய்துள்ளது.
அதற்கு பதிலாக ஆஸ்திரேலியா, அமெரிக்கா, இந்தியா மற்றும் ஜப்பான் நாடுகளின் தலைவர்கள் இந்த வார இறுதியில் ஜப்பானில் நடைபெறும் ஜி7 மாநாட்டில் சந்திப்பார்கள் என்று ஆஸ்திரேலிய பிரதமர் அந்தோனி அல்பானீஸ் தெரிவித்துள்ளார்.