பெங்களூரு: கர்நாடகாவின் அடுத்த முதல்வராக சித்தராமையா தேர்வு செய்யப்படுவார் என தகவல் வெளியாகும் நிலையில், முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக டி.கே.சிவகுமாரின் சொந்த மாவட்டத்தில் பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டுள்ளது.
கர்நாடகாவின் அடுத்த முதல்வர் யார் என்பதில் அம்மாநில காங்கிரஸ் தலைவரான டி.கே.சிவகுமாருக்கும், முன்னாள் முதல்வர் சித்தராமையாவுக்கும் இடையே கடும் போட்டி நிலவி வருகிறது. இருவரையும் டெல்லிக்கு அழைத்து, அவர்களுடன் காங்கிரஸ் தலைமை பேச்சுவார்த்தை நடத்தி வருகிறது. இன்று இருவரும் காங்கிரஸ் மூத்த தலைவர் ராகுல் காந்தியை அவரது இல்லத்தில் தனித்தனியே சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தினர்.
அப்போது, சித்தராமையாவை முதல்வராகவும், டி.கே. சிவகுமாரை துணை முதல்வராகவும் நியமிப்பதற்கான ஆலோசனை முன்வைக்கப்பட்டதாகக் கூறப்படுகிறது. அதோடு, சிவகுமாருக்கு 6 துறைகளை வழங்க உறுதி அளிக்கப்பட்டதாகத் தெரிகிறது. இதனை ஏற்க சிவகுமார் மறுத்ததாகக் கூறப்படுகிறது. தனது தலைமையில்தான் காங்கிரஸ் கட்சி தேர்தலை எதிர்கொண்டு வெற்றி பெற்றுள்ளது என்பதை ராகுல் காந்திக்கு சுட்டிக்காட்டியதோடு, கடந்த 3 ஆண்டுகளாக சித்தராமையா கட்சிக்கு என்ன பங்களிப்பை வழங்கினார் என்றும் கேள்வி எழுப்பியதாகத் தகவல் வெளியாகி உள்ளது.
சித்தராமையா முதல்வராவது உறுதி என நம்பும் அவரது ஆதரவாளர்கள் கொண்டாட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். டெல்லியில் உள்ள ராகுல் காந்தியின் வீட்டின் முன்பாக சித்தராமையாவின் உருவப்படத்துக்கு அவரது ஆதரவாளர்கள் பால் அபிஷேகம் செய்து மகிழ்ச்சியை வெளிப்படுத்தினர். அதேநேரத்தில், ராகுல் காந்தியின் வீட்டின் முன் குழுமிய சிவகுமார் ஆதரவாளர்கள், அவரை முதல்வராக்க வேண்டும் என வலியுறுத்தும் பதாகைகளை ஏந்தியவாறு கோஷமிட்டனர்.
இந்நிலையில், சிவகுமாரின் சொந்த ஊரான ராமநகராவில் போலீஸ் பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டு கண்காணிப்பு தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. மேலும், அங்குள்ள மாவட்ட காங்கிரஸ் அலுவலகத்துக்கும் பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டுள்ளது. சித்தராமையா முதல்வராக அறிவிக்கப்படும் பட்சத்தில், சிவகுமாரின் ஆதரவாளர்கள் வன்முறையில் ஈடுபடக்கூடும் என்பதால் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டுள்ளதாகத் தகவல் வெளியாகி உள்ளது.
இந்த விவகாரம் குறித்து செய்தியாளர்களிடம் பேசிய காங்கிரஸ் செய்தித் தொடர்பாளர் ரன்தீப் சிங் சுர்ஜேவாலா, “கர்நாடக முதல்வர் குறித்த விவாதங்கள் தொடர்ந்து நடைபெற்று வருகின்றன. யார் முதல்வர் என்பது இன்றோ அல்லது நாளையோ அறிவிக்கப்பட்டுவிடும். அடுத்த 72 மணி நேரத்தில் மாநில அமைச்சரவை பதவியேற்கும்” என தெரிவித்திருந்தார்.
முன்னதாக, கர்நாடக சட்டப்பேரவைக்கு கடந்த 10-ம் தேதி நடைபெற்ற தேர்தலில் பதிவான வாக்குகள் கடந்த 13-ம் தேதி எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்பட்டன. இதில், காங்கிரஸ் கட்சி 135 தொகுதிகளில் வெற்றி பெற்று அறுதிப் பெரும்பான்மையுடன் ஆட்சி அமைக்கும் வாய்ப்பைப் பெற்றது. இதையடுத்து, பெங்களூருவில் கூட்டப்பட்ட காங்கிரஸ் எம்எல்ஏக்களின் கூட்டத்தில், முதல்வர் யார் என்பது குறித்து விவாதிக்கப்பட்டது.
காங்கிரஸ் தலைமை சார்பில் அனுப்பிவைக்கப்பட்ட மூவர் குழு, எம்எல்ஏக்களின் கருத்துக்களைக் கேட்டறிந்தது. அதோடு, முதல்வர் விவகாரத்தில் இறுதிமுடிவை கட்சித் தலைமை மேற்கொள்ள எம்எல்ஏக்களின் கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. கர்நாடக முன்னாள் முதல்வர் சித்தராமையாவுக்கும், கர்நாடக காங்கிரஸ் தலைவர் டி.கே. சிவகுமாருக்கும் இடையே கடும் போட்டி நிலவுவதால், முதல்வரை அறிவிப்பதில் காங்கிரஸ் தலைமைக்கு நெருக்கடி ஏற்பட்டுள்ளது. சித்தராமையாவும், சிவகுமாரும் டெல்லிக்கு வரவழைக்கப்பட்டு இருவரிடமும் கட்சித் தலைமை பேச்சுவார்த்தை நடத்தி வருகிறது குறிப்பிடத்தக்கது.