தமிழகத்தில் முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையிலான திமுக ஆட்சி இரண்டு ஆண்டுகளை நிறைவு செய்துவிட்டது. அரசியல் விமர்சகர்களின் பார்வையில் ஹனிமூன் காலம் எப்போதே முடிவுக்கு வந்துவிட்டது. அதன்பிறகான அரசின் ஒவ்வொரு நகர்வும் விமர்சிக்கப்படும். எனவே மிகவும் கவனத்துடன் அரசு செயல்பட வேண்டிய கட்டாயம் ஏற்பட்டது. இந்த சூழலில் தான் அமைச்சர்களின் நடவடிக்கைகள், அதிகாரிகளின் தன்னிச்சையான முடிவுகள், ஆடியோ விவகாரம், பாஜகவின் டார்கெட் அரசியல் என சில சர்ச்சைகளை திமுக அரசு சந்தித்தது.
அதிகாரிகள் இடமாற்றம்குறிப்பாக இரு பெரும் தலைகளின் ஒப்புதல் இல்லாமல் ஸ்டாலின் அரசில் ஒரு விஷயமும் நடக்காது என்ற பேச்சு எழுந்தது. அதில் ஒருவர் சமீபத்தில் தான் மாற்றப்பட்டு மாநிலத்தின் நிதிச் சுமையை சமாளிக்கும் முக்கியமான இடத்தில் அமர வைக்கப்பட்டுள்ளார். மற்றொருவர் கண்கொத்தி பாம்பாக அடுத்த பெரிய பதவிக்காக உளவு பார்த்து கொண்டிருப்பதாக விவரம் தெரிந்தவர்கள் கூறுகின்றனர். இந்நிலையில் தான் அமைச்சரவை மாற்றம், ஐஏஎஸ் அதிகாரிகள் மாற்றம் என அடுத்தடுத்து அதிரடிகள் அரங்கேறின.
சைலேந்திர பாபு ஐபிஎஸ் ஓய்வுஅடுத்தகட்டமாக ஐபிஎஸ் அதிகாரிகள் பணியிடமாற்றம் செய்யப்பட உள்ளனர். எனவே காலியாகும் அதிகாரமிக்க பதவிகளை நோக்கி முக்கியமான அதிகாரிகள் காய் நகர்த்த ஆரம்பித்துள்ளனர். அதில் தலைமை செயலாளர், போலீஸ் டிஜிபி உள்ளிட்டவை முக்கியமான பதவிகளாக பார்க்கப்படுகின்றன. குறிப்பாக காவல்துறையில் டாப் பதவிகளை நோக்கி பலரும் ஆர்வம் காட்டி வருகின்றனர். தற்போது டிஜிபியாக இருக்கும் சைலேந்திர பாபு ஐபிஎஸ் வரும் ஜூன் மாதம் ஓய்வு பெறுகிறார். இவரது இடத்திற்கு சென்னை மாநகர காவல் ஆணையராக இருக்கும் சங்கர் ஜிவால் ஐபிஎஸ் பெயர் அடிபடுகிறது.
டேவிட்சன் தேவாசீர்வாதம் ஐபிஎஸ்அப்படி பார்த்தால் சென்னை காவல் ஆணையர் பதவி காலியாகிறது. இதற்கு குறிவைத்து உளவுத்துறை டிஜிபி டேவிட்சன் தேவாசீர்வாதம் ஐபிஎஸ் காய் நகர்த்துவதாக தகவல் வெளியாகியுள்ளது. இவர் 1995ஆம் ஆண்டு தமிழ்நாடு கேடர் ஐபிஎஸ் பேட்சை சேர்ந்தவர். சொந்த ஊர் தூத்துக்குடி மாவட்டம் சாத்தான்குளம் அடுத்த முதலூர். எம்.பி பட்டதாரியான இவர், ஐபிஎஸ் அதிகாரியாக மாறியிருக்கிறார். எஸ்.பி, டிஐஜி, ஐஜி, ஏடிஜிபி என படிப்படியாக முன்னேறி வந்துள்ளார். ஆட்சியாளர்களின் குட்புக்கில் இவரது பெயர் இடம்பெற்றிருந்ததை அறிந்து ஸ்டாலின் தேர்வு செய்து உளவுத்துறை டிஜிபி பதவி கொடுத்தார்.
உளவுத்துறை தோல்விகடந்த இரண்டு ஆண்டுகளில் டேவிட்சன் தேவாசீர்வாதம் மீது சர்ச்சைகளும் எழாமல் இல்லை. பாஸ்போர்ட் விண்ணப்பங்கள் போலி ஆவணங்கள் மூலம் சரிபார்கப்பட்டதாக அண்ணாமலை வைத்த புகார் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. கிருஷ்ணகிரி மாவட்ட சூளகிரி அருகே எருது விடும் விழாவிற்கு அனுமதி மறுத்ததை கண்டித்து மிகப்பெரிய அளவில் நெடுஞ்சாலையில் போராட்டம் நடத்தியது, கள்ளக்குறிச்சி கனியாமூர் பள்ளியில் நடந்த கலவரம் உள்ளிட்ட சில நிகழ்வுகள் உளவுத்துறை தோல்வி உள்ளிட்டவை எதிர்க்கட்சிகளால் விமர்சிக்கப்பட்டன.
ஸ்டாலின் கணக்குஇந்நிலையில் டேவிட்சன் தேவாசீர்வாதம் மாறினால், அந்த இடத்திற்கு யார் வர வேண்டும் என்பதும் கவனிக்கப்பட வேண்டியுள்ளது. தற்போதைய சூழலில் ஆட்சிக்கு களங்கம் விளைவிக்கும் செயல்கள் தொடர் கதையாகி வருகின்றன. இவற்றை முன்கூட்டியே கணித்து காவல்துறையை எச்சரிக்க வேண்டியது உளவுத்துறையின் கடமை. எனவே டேவிட்சன் தேவாசீர்வாதத்தின் டார்கெட், புதிய உளவுத்துறை டிஜிபி ஆகியவற்றுக்கு ஸ்டாலின் டிக் அடிப்பாரா? என்ற எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது.