சென்னை: கார்த்தி தற்போது ராஜூ முருகன் இயக்கும் ஜப்பான் படத்தில் நடித்து வருகிறார்.
ட்ரீம் வாரியர் பிக்சர்ஸ் தயாரிப்பில் பிரம்மாண்டமாக உருவாகி வரும் இந்தப் படம் தீபாவளிக்கு வெளியாகும் என எதிர்பார்க்கப்பட்டது.
ஆனால், தனுஷ் – சிவகார்த்திகேயன் இருவரும் திடீரென கூட்டணி வைத்துவிட்டதால், ஜப்பான் ரிலீஸ் தேதியை மாற்ற படக்குழு முடிவு செய்துள்ளதாம்.
அதன்படி, கார்த்தியின் ஜப்பான் படத்தின் புதிய ரிலீஸ் தேதி குறித்து தகவல்கள் வெளியாகியுள்ளன.
ஜப்பான் புதிய ரிலீஸ் தேதி:கோலிவுட்டின் மினிமம் கியாரண்டி ஹீரோக்களில் ஒருவராக மாஸ் காட்டி வருவது கார்த்தி தான். கடந்தாண்டு விருமன், பொன்னியின் செல்வன், சர்தார் படங்கள் மூலம் மாஸ் காட்டிய கார்த்தி, இந்தாண்டும் பொன்னியின் செல்வன் 2 படம் மூலமே என்ட்ரி கொடுத்துள்ளார். இதனிடையே தனது 25 படமாக ஜப்பான் படப்பிடிப்பிலும் பிசியாக காணப்படுகிறார்.
குக்கூ, ஜிப்ஸி படங்கள் மூலம் கவனம் ஈர்த்த ராஜூ முருகன், கார்த்தியின் ஜப்பான் படத்தையும் இயக்கி வருகிறார். முதன்முறையாக கார்த்தி – ராஜூ முருகன் இணைந்துள்ள இந்தப் படம் ஆக்ஷன் ஜானரில் கொள்ளை சம்பவத்தை பின்னணியாக வைத்து உருவாகி வருகிறதாம். கார்த்தி ஜோடியாக அனு இம்மானுவேல் நடிக்கும் இந்தப் படத்திற்கு ஜிவி பிரகாஷ் இசையமைக்கிறார்.
ஜப்பான் திரைப்படம் தீபாவளிக்கு வெளியாகும் சொல்லப்பட்டது. ஆனால், தற்போது தீபாவளி ரேஸில் இருந்து பின்வாங்கவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. சிவகார்த்திகேயனின் அயலான் திரைப்படம் தீபாவளிக்கு வெளியாகும் என படக்குழு அறிவித்துவிட்டது. 5 ஆண்டுகளாக கிடப்பில் கிடந்த படம் என்றாலும் தரமான மேக்கிங், கிராபிக்ஸ், ஏஆர் ரஹ்மான் மியூசிக் என இந்தப் படத்தின் மீதான கிரேஸ் இன்னும் குறையவேயில்லை.
அதனால், அயலான் படத்துக்கு ரசிகர்களிடம் நல்ல வரவேற்பு இருக்கும் என சொல்லப்படுகிறது. அதேபோல், கார்த்திக் சுப்புராஜ் இயக்கியுள்ள ஜிகர்தண்டா டபுள் எக்ஸ் படமும் தீபாவளிக்கு வெளியாகிறது. ராகவா லாரன்ஸ், எஸ்ஜே சூர்யா நடித்துள்ள இந்தப் படத்துக்கும் ரசிகர்களிடம் எதிர்பார்ப்பு காணப்படுகிறது. இன்னொரு பக்கம் தனுஷின் கேப்டன் மில்லர் படமும் தீபாவளிக்கு வெளியாகலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.
ஒரேநாளில் தனுஷ், சிவகார்த்திகேயன் படங்கள் வெளியானால் ரசிகர்களின் கொண்டாட்டத்தை பற்றி கேட்கவே வேண்டாம். அதனால், ஜப்பான் பட ரிலீஸ் தேதியை மாற்றலாம் என கார்த்தியும் இயக்குநர் ராஜூ முருகனும் பிளான் செய்துவிட்டார்களாம். அதன்படி தீபாவளிக்கு முன்பே செப்டம்பர் 14ம் தேதி விநாயகர் சதுர்த்திக்கு ஜப்பான் படத்தை ரிலீஸ் செய்ய திட்டமிட்டுள்ளார்களாம். ஏற்கனவே சந்திரமுகி 2 படமும் அதேநாளில் தான் ரிலீசாக உள்ளது.
கடந்தாண்டு தீபாவளிக்கு கார்த்தியின் சர்தார் திரைப்படம் வெளியாகியிருந்தது. இந்தப் படம் பாக்ஸ் ஆபிஸில் 100 கோடி ரூபாய் வரை வசூலித்ததால், அதேபோல் ஜப்பான் படத்தையும் களமிறக்க நினைத்தார். ஆனால், இப்போதே தீபாவளி ரேஸில் அடுத்தடுத்து படங்கள் ரெடியாகி வருவதால், ஜப்பான் ரிலீஸ் தேதியை மாற்றுவதை தவிர வேறு வழியே இல்லையாம். இந்நிலையில், இந்தப் படத்தின் அடுத்தக்கட்ட படப்பிடிப்பு சென்னை ஈவிபி பிலிம் சிட்டியில் ஜூன் முதல் வாரம் தொடங்கவுள்ளதாம். அதற்காக 200 குடில்கள் கொண்ட செட் போடப்பட்டு வருவதாக சொல்லப்படுகிறது.