தமிழ்நாட்டையே உலுக்கும் வகையில் கள்ளச்சாராய மரணம் விவகாரம் அமைந்துள்ளது. பாதிக்கப்பட்டவர்களுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வரும் நிலையில் உயிரிழப்புகள் தொடர்ந்து அதிகரித்து வருகின்றன.
தமிழ்நாடு அரசுக்கு எதிர்ப்பு!
கள்ளச்சாராயத்தை ஒழிக்க தமிழக அரசு தவறியதாக அதிமுக உள்ளிட்ட எதிர்கட்சிகள் குற்றம் சாட்டி வருகின்றன. கட்சிகள் மத்தியில் உள்ள எதிர்ப்பு மக்கள் மத்தியில் பரவிவிடக்கூடாது என்பதற்காகவே உயிரிழந்தவர்களின் குடும்பத்துக்கு 10 லட்சம் ரூபாயும், சிகிச்சை பெற்றுவருபவர்களுக்கு 50 ஆயிரம் ரூபாயும் வழங்கப்பட்டுள்ளது என்று கூறுகிறார்கள் சில அரசியல் விமர்சகர்கள். அதிலும் கள்ளச்சாராயம் விற்ற குற்றவாளிகளில் ஒருவரான அமாவாசை என்பவருக்கும் 50 ஆயிரம் ரூபாய்க்கான வரைவோலை வழங்கப்பட்டது சர்ச்சையானது. அதன்பின்னர் அது ரத்து செய்யப்பட்டது.
தேசிய மனித உரிமைகள் ஆணையம் நோட்டீஸ்!
இந்நிலையில் கள்ளச்சாராயத்தால் நேரிட்ட மரணம் தொடர்பாக 4 வாரங்களுக்குள் அறிக்கை தாக்கல் செய்யுமாறு தலைமைச் செயலாளர் இறையன்பு மற்றும் டிஜிபி சைலேந்திர பாபு ஆகியோருக்கு தேசிய மனித உரிமைகள் ஆணையம் உத்தரவிட்டுள்ளது.
இது தொடர்பாக மனித உரிமைகள் ஆணையம் வெளியிட்ட செய்திக்குறிப்பில், “தமிழ்நாட்டின் விழுப்புரம் மற்றும் செங்கல்பட்டு மாவட்டங்களில் கள்ளச்சாராயம் குடித்து பலர் உயிரிழந்ததாகவும், ஏராளமானோர் மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டிருப்பதாகவும் ஊடகங்களில் செய்திகள் வெளியாகியுள்ளன.
மீனவர்கள் பாதிப்பு!
தமிழ்நாட்டின் கடற்கரை பகுதிகளில் இருக்கும் மீனவர்களே இந்த மெத்தனால் கலந்த சாராயத்தை அதிகளவில் குடித்திருப்பதாகவும் ஊடகங்கள் தெரிவிக்கின்றன. இதனை அடிப்படையாகக் கொண்டு, இந்த விவகாரத்தை தேசிய மனித உரிமைகள் ஆணையம் தாமாக முன்வந்து வழக்கு பதிவு செய்துள்ளது. இந்த செய்திகள் உண்மையாக இருப்பின் அது மனித உரிமை மீறலாகும்.
கள்ளச்சாராயம் விற்பனை மற்றும் குடிப்பதைத் தடுக்க தமிழ்நாடு அரசு தவறிவிட்டது. இந்த விவகாரம் தொடர்பாக 4 வாரங்களுக்குள் அரசின் தலைமைச் செயலர் மற்றும் டிஜிபி அறிக்கைதாக்கல் செய்ய வேண்டும்.
கள்ளச்சாராயம் விவகாரம் – எடுக்கப்பட்ட நடவடிக்கை என்ன?
முதல் தகவல் அறிக்கை, பாதிக்கப்பட்டவர்களுக்கான மருத்துவ சிகிச்சைஆகியவற்றின் நிலை என்ன, உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு இழப்பீடு ஏதும் வழங்கப்பட்டதா, இச்சம்பவத்துக்கு காரணமான கடமை தவறிய அதிகாரிகள் மீது எடுக்கப்பட்ட நடவடிக்கை என்ன என்பன உள்ளிட்ட விவரங்கள் இடம்பெற வேண்டும்” என்று அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இறையன்பு, சைலேந்திரபாபு: 4 வாரங்கள் அவகாசம்!
தலைமைச் செயலாளர் இறையன்பு ஜுன் மாதத்துடன் பணி ஓய்வு பெற உள்ள நிலையில் இந்த நோட்டீஸ் வழங்கப்பட்டுள்ளது. முன்னதாக சிதம்பரம் குழந்தை திருமணம் விவகாரம் தொடர்பாக தேசிய குழந்தைகள் பாதுகாப்பு ஆணையம் இறையன்பு விளக்கம் அளிக்க நோட்டீஸ் அனுப்பியிருந்தது குறிப்பிடத்தக்கது.