சென்னை : இன்று செய்தியாளர் சந்திப்பின்போது, செய்தியாளர் ஒருவர் டாஸ்மாக் கடைகளில் 10 ரூபாய் கூடுதலாக வாங்கப்படுவது பற்றி கேள்வி எழுப்ப அதனை மறுத்தார் அமைச்சர் செந்தில் பாலாஜி. தொடர்ந்து செய்தியாளர் அதே குற்றச்சாட்டை முன்வைத்ததால், அவருடன் வாக்குவாதம் செய்தார் அமைச்சர் செந்தில் பாலாஜி.
மின்சாரம், மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வைகள் துறை அமைச்சர் செந்தில் பாலாஜி இன்று சென்னையில் செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது பேசிய அவர் டாஸ்மாக் நிறுவனத்தில் ஒளிவு மறைவின்றி நிர்வாகம் நடந்து வருகிறது எனத் தெரிவித்தார்.
அப்போது செய்தியாளர் ஒருவர், தமிழ்நாடு முழுவதும் டாஸ்மாக் கடைகளில் 10 ரூபாய் கூடுதலாக வாங்குகிறார்கள், கேட்டால் டாஸ்மாக் கடை விற்பனையாளர்களே, கரூர் கம்பெனி தான் வாங்கச் சொல்கிறார்கள் எனச் சொல்கிறார்கள் எனக் கூறினார்.
அதற்கு அமைச்சர் செந்தில் பாலாஜி, பொத்தாம் பொதுவாக குற்றச்சாட்டு வைக்காதீர்கள், எந்தக் கடை எனக் குறிப்பிட்டுச் சொல்லுங்கள் என்றார். அதற்கு செய்தியாளர், எல்லா கடைகளிலுமே அப்படித்தான் வாங்குகிறார்கள், என்னுடன் டூ-வீலரில் வந்தால் நானே அழைத்துச் சென்று காட்டுகிறேன் என்றார்.
தொடர்ந்து அமைச்சர் இந்த குற்றச்சாட்டை மறுத்த நிலையில், அங்கிருந்த செய்தியாளர்கள் அனைவரும், எல்லா கடைகளிலுமே 10 ரூபாய் அதிகமாகத்தான் வாங்கப்படுகிறது என்றனர். செய்தியாளர்கள் அனைவரும் பேசியதால் டென்ஷன் ஆன செந்தில் பாலாஜி, “தலைவா.. நான் சொல்றத மொத கேளுங்க.. கேள்விக்கு பதில் சொல்ல விடுங்க..” என்றார்.
தொடர்ந்து, எந்தக் கடையில 10 ரூபாய் அதிகம் கேட்டாங்க? எனக் கேள்வி எழுப்பினார் அமைச்சர் செந்தில் பாலாஜி. அதற்கு செய்தியாளர், எல்லா கடைகளிலும் என மீண்டும் சொல்ல, அமைச்சர் செந்தில் பாலாஜி, 5000 கடைகளுக்கும் சென்று பாட்டில் வாங்கினீர்களா? என்று சீறினார்.
மேலும் பேசிய அமைச்சர் செந்தில் பாலாஜி, “டாஸ்மாக் கடைகளில் தவறுகள் இருந்தால் கடை எண்ணை குறிப்பிட்டு புகார் சொன்னால் நிச்சயமாக விசாரிப்போம். இதுவரை 1977 பேர் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டு 5.50 கோடி ரூபாய் அபராதம் வசூலிக்கப்பட்டுள்ளது. தவறு செய்பவர்கள் மீது நடவடிக்கை எடுத்தால் அவர்களை பாதுகாக்க தொழிற்சங்கத்தினர் ஆர்ப்பாட்டம் நடத்துகிறார்கள்.
புகார் எங்கெல்லாம் வருகிறதோ, அங்கெல்லாம் ஆய்வு நடத்த அதிகாரிகள் அனுப்பப்பட்டு, விசாரித்து நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. சென்னை உள்ளிட்ட சில குறிப்பிட்ட மாவட்டங்களில் நீதிமன்றத்தில் வழக்கு உள்ளதால் அப்பகுதிகளில் பார்கள் திறக்கப்படாமல் உள்ளது.” என்றார்.
கள்ளச்சாராய பலி பற்றிய கேள்விக்கு பதில் அளித்த அமைச்சர் செந்தில் பாலாஜி, “நடக்கக்கூடாத ஒரு சம்பவம் நடந்துள்ளது. இதில் முதலமைச்சர் நடவடிக்கைகளை எடுத்துள்ளார். இது போன்ற சம்பங்களில் கடந்த அதிமுக ஆட்சியில் 20க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர். இந்த கேள்வியை எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமியிடம் யாரும் கேட்கவில்லை. வரும் காலங்களில் இது போன்ற சூழல் நடந்து விடக்கூடாது என்பதில் அரசு உறுதியாக உள்ளது.” எனத் தெரிவித்தார்.