தேனி அருகே கோட்டூரைச் சேர்ந்தவர் அருளானந்தம். தேனி ஆயுதப்படை போலீஸாக இருக்கும் இவருடைய தந்தை ஜான்பீட்டர், உடல்நலக்குறைவால் நேற்று மாலை உயிரிழந்தார். அதே ஊரிலுள்ள கல்லறைத் தோட்டத்தில் அவரின் உடலை அடக்கம் செய்ய, இவர் சார்ந்த சமுதாயத்தைச் சேர்ந்த மக்கள் எதிர்ப்பு தெரிவித்தனர். இதனால் கோட்டூர் பகுதியில் போலீஸார் குவிக்கப்பட்டதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.
காவல்துறையில் பணியாற்றும் ஒருவரின் தந்தையின் உடலை அடக்கம் செய்யவே அதே சமுதாயத்தைச் சேர்ந்தவர்கள் ஏன் தடையாக இருக்கின்றனர் என்பதையறிய கோட்டூருக்குச் சென்று விசாரித்தோம். கோட்டூரில் பல்வேறு சமுதாயங்களைச் சேர்ந்த மக்கள் வசித்து வருகின்றனர். அதில் ஆர்.சி சர்ச் தெருவில் 210 பட்டியலின மக்கள் குடும்பங்கள் வசித்து வருகின்றன. இவர்கள் சார்ந்திருக்கும் சமுதாயத்துக்குத் தனிச் சபை காலங்காலங்மாக இருந்து வருகிறது. அதில் சமுசாய பெரியதனம் என அழைக்கப்படும் 3 அல்லது 4 பேர் சமுதாயத் தலைவர்களாக இருப்பார்கள். அவர்கள் 2 அல்லது 3 ஆண்டுகளுக்கு ஒரு முறை மாற்றப்பட்டுக் கொண்டிருப்பார்கள்.
இந்தச் சமுதாயத்தைச் சேர்ந்த ஆண், பெண்கள் காதல் திருமணம் செய்துகொண்டால் சமுதாயச் சபைக் கூட்டப்பட்டு, அந்தச் சமுதாய மக்கள் மற்றும் சமுதாயத் தலைவர்கள் காலில் `நெடுஞ்சாண் கிடையாக’ விழுந்து மன்னிப்புக் கேட்ட வேண்டும். இல்லையெனில் 10,000 ரூபாய் முதல் ஒரு லட்சம் ரூபாய் வரை அபராதம் விதிக்கப்படும்.
இந்த நிலையில், அதே பகுதியைச் சேர்ந்த ஜான்பீட்டருக்கு, மனைவி லிகோரியா, மகன்கள் போலீஸாக இருக்கும் அருளானந்தம், உதவிப் பேராசிரியராக இருக்கும் அமல்ராயன், ஜேசிபி ஆப்ரேட்டராக இருக்கும் ஆரோன், ராணுவத்தில் நர்சிங் பிரிவில் இருக்கும் ஆமோஸ் என நான்கு மகன்கள் இருக்கின்றனர். இதில் ஜேசிபி ஆபரேட்டராக இருக்கும் ஆரோன் தஞ்சாவூரில் எம்.ஏ., தமிழ் இலக்கியம் படித்தபோது, உடன்படித்த மாணவியுடன் காதல் ஏற்பட்டு அவரைத் திருமணம் செய்ய விரும்பியிருக்கிறார்.
இருவரும் பட்டியலின வகுப்பைச் சேர்ந்தவர்கள் என்றபோதிலும், பெற்றோர்கள் அவர்களை ஏற்றுக்கொண்டபோதிலும், கோட்டூரில் ஆரோன் சமுதாயக் கட்டுப்பாடுகளை மீறி காதல் திருமணம் செய்துவிட்டார். எனவே அவரும் அவர் திருமணம் செய்யவிருக்கும் பெண் மற்றும் பெற்றோர் சமுதாயத் தலைவர்கள் காலில் விழுந்து மன்னிப்புக் கேட்க வேண்டும் எனக் கூறியிருக்கின்றனர். இதை ஏற்க மறுத்த ஆரோன், தான் காதலித்தப் பெண்ணை அழைத்துக் கொண்டு சின்னமனூரில் வைத்து திருமணம் செய்துகொண்டிருக்கிறார். அதில் ஆத்திரமடைந்த சமுதாயச் சபை, ஜான்பீட்டர் குடும்பத்தை ஒதுக்கிவைத்துவிட்டது.
கடந்த 3 ஆண்டுகளாக ஒதுங்கியிருந்த நிலையில், ஜான்பீட்டர் உடல்நலக்குறைவால் உயிரிழந்துவிட்டார். ஆனால் சமுதாயச் சபைக்குக் கட்டுப்படவில்லை எனக் கூறி, அவரின் உடலை அடக்கம் செய்யவிடாமல் சமுதாயத்தைச் சேர்ந்த மக்கள் தடுத்திருக்கின்றனர். தகவலறிந்த வீரபாண்டி போலீஸார் நிகழ்விடத்துக்குச் சென்று பேச்சுவார்த்தை நடத்தியதைத் தொடர்ந்து, `விருப்பமுள்ளவர்கள் ஜான்பீட்டருக்கு இறுதி அஞ்சலி செலுத்தச் செல்லலாம். அடக்கம் செய்வதற்கு யாரும் தடையாக இருக்கக் கூடாது’ என போலீஸார் எச்சரித்துச் சென்றனர். இதையடுத்து ஜான்பீட்டர் உடல் போலீஸார் பாதுகாப்புடன் ஊர்வலமாக எடுத்துச் செல்லப்பட்டு அடக்கம் செய்யப்பட்டது.
இருப்பினும் சமுதாயச் சபைக் கட்டுப்பாட்டைப் பின்பற்றாத ஜான்பீட்டரின் இறப்புக்கு யாரும் செல்லக் கூடாது எனவும், அதையும் மீறி சென்றால் அவர்களும் விலக்கி வைக்கப்படுவார்கள் எனவும் சமுதாயச் சபை சார்பில் தெரிவிக்கப்பட்டது.
மேலும், `அடக்கம் செய்வதற்கு மட்டும்தான் அனுமதித்திருக்கிறோம். ஆனால் அவர்கள் மன்னிப்பு கேட்டால் மட்டுமே… சமுதாயத்துடன் ஒன்றி வாழ முடியும்’ எனக் கூறியதால், அந்தப் பகுதியில் பெரும் சலசலப்பு ஏற்பட்டது.