கர்நாடகா முதலமைச்சராக சித்தராமையா நாளை பிற்பகல் பதவி ஏற்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
கர்நாடக சட்டமன்றத் தேர்தலில் 135 இடங்களில் வென்ற காங்கிரஸ், அறுதி பெரும்பான்மையுடன் ஆட்சியமைக்க உள்ளது. ஆனால், அடுத்த முதல்வர் யார் என்பவதில் குழப்பம் ஏற்பட்டது. ஏனென்றால் முன்னாள் முதல்வர் சித்தராமையா, மாநில காங்கிரஸ் தலைவர் டி.கே.சிவகுமார் ஆகிய இருவரும் பலம் வாய்ந்தவர்களாக உள்ளனர்.
எனவே, அடுத்த முதலமைச்சராக யாரை அறிவிப்பது என்பது குறித்து டெல்லியில் ராகுல்காந்தியுடன் ஆலோசனை நடத்தப்பட்டது. ராகுல்காந்தியின் இல்லத்தில் முதலில் சித்தராமையாவுடன் ஆலோசனை நடத்தப்பட்டது.
சித்தராமையாவைத் தொடர்ந்து, டி.கே.சிவக்குமாரும் ராகுல்காந்தியுடன் ஆலோசனை நடத்தினார்.இதைத் தொடர்ந்து, முதல் இரண்டரை ஆண்டுகள் சித்தராமையா முதலமைச்சராகவும், அடுத்த இரண்டரை ஆண்டுகள் சிவக்குமாரை முதலமைச்சராக்கவும் ஆலோசிக்கப்பட்டுள்ளது.
முதல் இரண்டரை ஆண்டுகள் சிவக்குமார் துணை முதலமைச்சராக செயல்படுவார் என்றும், அத்துடன் அவர், உள்துறை மற்றும் நீர்வளத்துறை அமைச்சர் பதவி கேட்டதாகவும் தகவல் வெளியாகியிருக்கிறது.
இந்நிலையில் சித்தராமையா முதலமைச்சராக நாளை பிற்பகல் 3.30 மணிக்கு கண்டிரவா மைதானத்தில் பதவியேற்க இருப்பதாகவும் தகவல் வெளியாகியுள்ளது. சிவக்குமாருக்கு 2024 நாடாளுமன்றத் தேர்தல் வரை மாநில காங்கிரஸ் தலைவர் பதவி நீட்டிக்கப்படுவதாகவும் காங்கிரஸ் வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.
newstm.in