கடலூர் : கட்சி கொடிக் கம்பத்தை புதுப்பித்து நடும் போது மின்சாரம் பாய்ந்து, பாட்டாளி மக்கள் கட்சியின் கிளைச் செயலாளர் சந்தோஷ்குமார் உயிரிழந்தார்.
பா.ம.க. செயல்வீரர் சந்தோஷ்குமார் மறைவுக்கு பாமக நிறுவனர் மருத்துவர் இராமதாஸ் இரங்கல் தெரிவித்துள்ளார். அவரின் அந்த இரங்கல் செய்தியில், “கடலூர் மாவட்டம் திருவந்திபுரத்தையடுத்த கே.என்.பேட்டையில் பாட்டாளி மக்கள் கட்சியின் கொடிக் கம்பத்தை புதுப்பித்து நடும் போது மின்சாரம் பாய்ந்து பாட்டாளி மக்கள் கட்சியின் கிளைச் செயலாளர் சந்தோஷ்குமார், உயிரிழந்தது மிகுந்த வேதனையளிக்கிறது. அவரை இழந்து வாடும் குடும்பத்தினர் மற்றும் நண்பர்களுக்கு ஆழ்ந்த இரங்கலையும், அனுதாபங்களையும் தெரிவித்துக் கொள்கிறேன்.
சந்தோஷ்குமார் சிறுவனாக இருந்த காலத்திலிருந்தே பாட்டாளி மக்கள் கட்சியின் தம்மை இணைத்துக் கொண்டு பணி செய்து வந்தார். மிகவும் துடிப்பான இளைஞர். கட்சி வளர்ச்சிக்காக ஓயாமல் உழைத்து வந்தவர். அரசியலில் உயரங்களைத் தொட வேண்டிய அவர், திடீரென உயிரிழந்தது பெரும் சோகத்தை ஏற்படுத்துகிறது. சந்தோஷ்குமாருக்கு ஏற்பட்டது போன்ற விபத்து இனி எவருக்கும் ஏற்படக்கூடாது. பாட்டாளி மக்கள் கட்யினர் கட்சிப் பணியாற்றும் போதும், சொந்தப் பணியாற்றும் போதும் கவனத்துடனும், எச்சரிக்கையுடனும் செயல்பட வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறேன்.
இதேபோல், பா.ம.க. தலைவர் மருத்துவர் அன்புமணி இராமதாஸ் விடுத்துள்ள இரங்கல் செய்தியில், “கடலூர் கே.என்.பேட்டை பகுதியைச் சேர்ந்த பாட்டாளி மக்கள் கட்சியின் கிளைச் செயலாளர் சந்தோஷ்குமார், கட்சிக் கொடிக் கம்பத்தை புதுப்பித்து நடும் போது மின்சாரம் பாய்ந்து உயிரிழந்ததை அறிந்து மிகுந்த வேதனையடைந்தேன்.
சந்தோஷ்குமார் மிகவும் துடிப்பான இளைஞர். அர்ப்பணிப்பு உணர்வுடன் கட்சிப் பணியாற்றி வந்த அவரது மறைவை மனம் ஏற்றுக் கொள்ள மறுக்கிறது. அவரை இழந்து வாடும் குடும்பத்தினருக்கும், நண்பர்களுக்கும் எனது ஆழ்ந்த இரங்கலையும், அனுதாபங்களையும் தெரிவித்துக் கொள்கிறேன்.
சந்தோஷ்குமார் போன்றவர்கள் தான் கட்சியின் சொத்து. அவர்களை இழக்க நான் தயாராக இல்லை. கட்சிப் பணியாற்றுவதை விட பாட்டாளிகளின் பாதுகாப்பு தான் முக்கியம் ஆகும். எனவே, பாட்டாளி மக்கள் கட்யினர் கட்சிப் பணியாற்றும் போதும், சொந்தப் பணியாற்றும் போதும் மிகுந்த கவனத்துடன் செயல்பட வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறேன்” என்று அன்புமணி இராமதாஸ் தெரிவித்துள்ளார்.