புலம்பெயர்ந்த இலங்கையர்களுக்கான அரசாங்க வீடமைப்புத் திட்டங்கள்

அடுக்குமாடி குடியிருப்புகள் மற்றும் தனி வீடுகள்

தமது சொந்த காணியில் வீடு கட்டவும் வசதிகள்

வெளிநாட்டில் வாழும் இலங்கையர்களின் வீட்டுக்கனவை நனவாக்கும் வகையில் அவர்களுக்கான வீடமைப்புத்திட்டமொன்றை ஆரம்பிப்பதற்கான நடவடிக்கைகளை தொழில் மற்றும் வெளிநாட்டு வேலைவாய்ப்பு அமைச்சர் கௌரவ மனுஷ நாணாயக்கார தற்போது மேற்கொண்டுள்ளார்.

இலங்கை வெளிநாட்டு வேலைவாய்ப்புப் பணியகம் மற்றும் தேசிய வீடமைப்பு அபிவிருத்தி அதிகார சபையுடன் இணைந்து இந்த வீடமைப்புத் திட்டம் நடைமுறைப்படுத்தப்படவுள்ளது.

புலம்பெயர் தொழிலாளர்கள் உட்பட வெளிநாடுகளில் வசிக்கும் இலங்கையர்களின் தேவைக்கு ஏற்ப, நகர்ப்புற அடுக்குமாடி குடியிருப்புகளாகவும், கிராமப்புற தனிநபர் வீட்டுத் தொகுதிகளாகவும் இந்த வீட்டுத் திட்டம் நடைமுறைப்படுத்தப்பட உள்ளது. இதுதவிர தமது காணியில் வீடு கட்டுவதற்கும் இதன் கீழ் ஏற்பாடுகள் செய்யப்பட உள்ளன. இதற்கான நிதிப் பங்களிப்பை இலங்கை வெளிநாட்டு வேலைவாய்ப்புப் பணியகம் வழங்கவுள்ளது.

இது தொடர்பான கலந்துரையாடல் நேற்று (16) நகர மற்றும் வீடமைப்பு அபிவிருத்தி இராஜாங்க அமைச்சர் திரு. தேனுக விதானகமவுடன் இடம்பெற்றதுடன், இதன் போது எதிர்வரும் திங்கட்கிழமை புலம்பெயர் தொழிலாளர்களின் வீட்டுத் தேவைகள் தொடர்பான கணக்கெடுப்பை ஆரம்பிக்க தீர்மானிக்கப்பட்டது. இரண்டு வாரங்களுக்குள் இந்த தகவல்கள் கிடைக்கப்பெறும் என எதிர்பார்க்கப்படுவதுடன், அனைத்து பிரதேச செயலகங்களில் ஒன்றிணைக்கப்பட்டுள்ள அபிவிருத்தி உத்தியோகத்தர்கள் ,தூதரகங்கள் மற்றும் வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகத்தின் உத்தியோகபூர்வ இணையத்தளத்தின் ஊடாகவும் கணக்கெடுப்பு நடத்தப்பட உள்ளது.

புலம்பெயர்ந்த தொழிலாளர்கள் மற்றும் அவர்களது குடும்ப உறுப்பினர்களை இலக்காகக் கொண்டு நடத்தப்படும் கணக்கெடுப்பில் பெறப்பட்ட தரவுகளை பகுப்பாய்வு செய்த பின்னர், கட்டப்படும் வீடுகளின் வகைகள், கட்டப்படும் பகுதிகள் அடையாளம் காணப்பட உள்ளன. அதன் பின்னர் வீடமைப்பு அபிவிருத்தி அதிகார சபைக்கும் அரசாங்கத்திற்கும் சொந்தமான காணிகளை பயன்படுத்தி வீட்டுத்திட்டம் நடைமுறைப்படுத்தப்படும்.

இக்கலந்துரையாடலில் இலங்கை வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகத்தின் தலைவர் ஹில்மி அஸீஸ் ,தேசிய வீடமைப்பு அபிவிருத்தி அதிகார சபையின் தலைவர் ரஜீவ் சூரியாராச்சி உள்ளிட்ட அதிகாரிகள் பலர் கலந்துகொண்டனர்

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.