புதுடெல்லி: “இந்தியாவில் மத சுதந்திரம் மோசடைந்து வருவதாக அமெரிக்க வெளியுறவுத் துறை வெளியிட்ட அறிக்கை தவறானது; உள்நோக்கம் கொண்டது” என்று இந்திய வெளியுறவுத் துறை விமர்சித்துள்ளது.
சர்வதேச அளவில் மத சுதந்திரம் குறித்து அமெரிக்க வெளியுறவுத் துறை கடந்த திங்கள்கிழமை அறிக்கை ஒன்றை வெளியிட்டது. அதில், இந்தியாவில் மத சுதந்திரம் எவ்வாறு இருக்கிறது என்பது குறித்தும் குறிப்பிடப்பட்டுள்ளது. இந்தியாவில் மத சுதந்திரம் மோசமடைந்து வருவதாகவும், கிறிஸ்தவர்கள், இஸ்லாமியர்கள், பட்டியல் சமூகத்தவர்களுக்கு எதிராக வன்முறைகள் அதிகரித்துள்ளதாகவும் அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது. மேலும், மதமாற்றத் தடைச் சட்டத்தை சில மாநிலங்கள் நிறைவேற்றி இருப்பதையும் அது விமர்சித்துள்ளது. அதோடு, காஷ்மீர் பள்ளத்தாக்கில் இஸ்லாமிய பயங்கரவாதிகளால் அச்சுறுத்தல் இருந்தபோதிலும், அங்கிருந்து இந்துக்கள் வெளியேற அனுமதிக்கப்படுவதில்லை என்றும் அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.