ராஞ்சி: தொழில்நுட்பமும், விஞ்ஞானமும், பல்கி பெருகி கொண்டிருக்கும் இந்த தேசத்தில், கட்டப்பஞ்சாயத்துகளுக்கு இதுவரை யாரும் முடிவுகட்டியதாக தெரியவில்லை.. பொதுமக்களின் நன்மைக்காகவே, எண்ணற்ற சட்டவழிமுறைகள் அமலில் இருந்தபோதிலும், இன்றைக்கும்கூட, “ஆலமரத்தடியில்” நடக்கும் ஊர்பஞ்சாயத்துகளில், பல்வேறு பெண்களின் உயிர்கள் ஊசலாடி கொண்டிருப்பது, பெருத்த வேதனையையும், கவலையையும் நமக்குள் ஏற்படுத்தி கொண்டிருக்கிறது.. இதோ இந்த சம்பவத்தை பாருங்கள்..!!
ஜார்க்கண்ட் மாநிலத்தில் பலமு அருகே ஜோகிடிஹ் என்ற கிராமம் உள்ளது.. இந்த கிராமத்தில் வசித்து வரும் 24 வயது பழங்குடி இனத்தை சேர்ந்த பெண் அவர்.
2 அண்ணன்கள், 2 அக்காக்கள் இருக்கிறார்கள்.. ஆனால், கடந்த 8 வருடங்களுக்கு முன்பேயே இந்த பெண்ணின் பெற்றோர் இறந்துவிட்டனர்.. அதனால், அண்ணன்கள், அக்காக்களுடன் ஒன்றாகவே வசித்து வந்தார்.
கல்யாணம்: இந்நிலையில், அந்த பெண்ணுக்கு வீட்டில் திருமண ஏற்பாடுகளை உறவினர்கள் செய்து வந்தார்கள்.. அதன்படி, ஒரு மாப்பிள்ளையும் பார்த்து நிச்சயம் செய்தனர்.. ஆனால், தனக்கு கல்யாணம் வேண்டாம் என்று அந்த பெண் மறுத்தார். இதனால் ஆத்திரம் அடைந்த உறவினர்கள், தாங்கள் பார்த்து வைத்துள்ள மாப்பிள்ளையை தான், கல்யாணம் செய்யவேண்டும் என்று கட்டாயப்படுத்தினார்கள். ஆனாலும் அந்த பெண், இந்த கல்யாணத்துக்கு சம்மதிக்கவில்லை.
அவ்வளவு சொல்லியும் கேட்காததால், ஆத்திரமடைந்த குடும்பத்தினர், பெண்ணை அடித்து உதைத்து சித்ரவதை செய்ய துவங்கினர்.. இந்த சித்ரவதை நாள்தோறும் அதிகரித்தபடியே வந்தது.. இதனால், மனம்நொந்துப்போன அந்த பெண், ஒருநாள் தன்னுடைய வீட்டை விட்டு வெளியேறி, உறவினர் ஒருவர் வீட்டில் தஞ்சம் அடைந்தார்.. இந்த விஷயத்தை கேள்விப்பட்டதுமே, குடும்பத்தினர் மேலும் ஆத்திரம் அடைந்தனர்.
காதலன் பெயர்: அதனால், சகோதரர்கள் 2 பேரும் கிளம்பி வந்து, உறவினர் வீட்டிலுள்ள தங்கையை மறுபடியும் தங்களது கிராமத்துக்கே அழைத்து வந்தனர்… அதேசமயம், இந்த பெண் எதற்காக திருமணம் வேண்டாம் என்று சொல்கிறார் என குழம்பி போனார்கள்.. ஒருவேளை வேறு யாரையாவது காதலிக்கலாம், அதனால்தான், கல்யாணம் வேண்டாம் என்று சொல்கிறார் போலும் என கிராம மக்கள் குடும்பத்தினரிடம் சொல்லி உள்ளனர்.. இதையடுத்து ஊர் பஞ்சாயத்து கூடியது.
அந்த பெண் ஊருக்கு முன்ப எல்லார் முன்பும் நிறுத்தப்பட்டார்.. விசாரணையும் அவரிடம் துவங்கியது.. “நீ யாரை காதலிக்கிறாய்? அவன் பெயர் என்ன?” என்று சரமாரியாக கேள்விகளை எழுப்பினார்கள்.. அநத் பெண் எதற்குமே பதில் சொல்லவில்லை.. அமைதியாக நின்று கொண்டிருந்தார்.. எத்தனை முறை கேட்டும், கல்யாணம் ஏன் வேண்டாம் என்ற கேள்விக்கு பதிலே சொல்லவில்லை.
ஆத்திரம்: இதனால் எரிச்சலடைந்த ஊர்ப்பெரியவர்கள், அந்த பெண்ணை ஊரை விட்டே ஒதுக்கி வைக்கப்படுவதாக பஞ்சாயத்தில் தீர்ப்பு தந்தார்கள்.. இப்படி ஒரு தீர்ப்பை சொன்னதுமே, குடும்பத்தினர் அடுத்தக்கட்ட வேலையில் இறங்கினார்கள்.. அந்த பெண்ணின் தலையை மொட்டையடித்தனர்.. கழுத்தில் செருப்பு மாலை அணிவித்து அதே கிராமத்தை சுற்றி, ஊர்வலமாக அழைத்து வந்தார்கள்.. இதனால், அந்த பெண், அவமானத்தால் நிலைகுலைந்து போய்விட்டார்..
அப்போதும் குடும்பத்தினர் விடவில்லை.. சரமாரியாக அடித்து உதைத்து, பக்கத்தில் இருந்த காட்டுப் பகுதிக்கு, தரதரவென இழுத்து சென்றார்கள்.. அந்த காட்டில் இருந்த இலுப்பை மரத்தில், பெண்ணை கட்டிப்போட்டுவிட்டு சென்றுவிட்டார்கள்.. இவ்வளவும் நடந்து முடிய சாயங்காலம் நேரமாகிவிட்டது.. ஆனால், இரவு நேரமாகியும் யாருமே அந்த காட்டுப்பக்கம் வரவில்லை.. ராத்திரி முழுக்க அந்த பெண், காட்டுக்குள்தான் தனியாக கிடந்தார்.. சாப்பாடு, தண்ணீர் எதுவுமே இல்லை.. ஆள் நடமாட்டம் இல்லாத காட்டில், நடந்து செல்லக்கூடி முடியாத அளவுக்கு, கைகால்கள் கட்டிப்போடப்பட்டிருந்தன.
கதறல்கள்: சத்தம் போட்டாலும் ஒருத்தரும் எளிதாக வரவே முடியாத அளவுக்கு அடர்ந்த காட்டுப்பகுதி அது.. இரவெல்லாம் நடுநடுங்கி கிடந்தார் அந்த பெண்.. பொழுதும் விடிந்தது.. காலை நேரம், அந்த காட்டுக்குள் சிலர் ஆடு, மாடு மேய்க்க வந்திருக்கிறார்கள்.. அப்போதுதான், இளம்பெண் மரத்தில் கட்டி வைக்கப்பட்டு இருப்பதை பார்த்து அதிர்ச்சி அடைந்தனர்… உடனே அந்த பெண்ணின் கைகளில் கட்டப்பட்டு இருந்த கயிறுகளை அவிழ்த்துவிட்டனர்.. உள்ளூர் போலீசாருக்கும் தகவலும் தந்தனர்..
இதையடுத்து, போலீசார் விரைந்து காட்டுக்குள் சென்று, அந்த பெண்ணை மீட்டனர்.. அந்த பெண்ணால் கண்ணைகூட திறக்கமுடியவில்லை.. உடம்பெல்லாம் காயங்கள் காரணமாக நடக்கவும் முடியவில்லை.. பார்ப்பதற்கே சோர்வாகவும், மயக்க நிலையிலும் இருந்தார்.. எனவே, அங்குள்ள மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் அவரை போலீசார் அனுமதித்தனர்.. டாக்டர்கள் அந்த பெண்ணை செக்கப் செய்தனர்..
மர்ம உறுப்புகள்: அப்போதுதான், பெண்ணின் மர்ம உறுப்புகளில் பலத்த காயங்கள் இருந்தது தெரியவந்தது.. அதை பார்த்து டாக்டர்களே மிரண்டு போனார்கள்.. மிகக்கொடூரமாக அந்த பெண், சித்ரவதை செய்யப்பட்டு இருக்கலாம் என்று போலீசார் சொல்கிறார்கள்… இது தொடர்பாக விசாரணையும் நடந்து கொண்டிருக்கிறது..
இந்த சம்பவம் கேள்விப்பட்டு பலரும் கதிகலங்கி போயுள்ளனர்.. பொதுவாக, வடமாநில மக்களுக்கு கல்வி முழுமையாக கிடைக்காமல், தடுக்கப்படுவதாகவும், மறுக்கப்படுவதாகவும் சொல்லப்பட்டு வருகிறது.
இந்த தேசத்தில் அனைவருக்கும் கல்வி அறிவு மட்டும் கிடைத்துவிட்டால், மற்றதெல்லாம் நமக்கு எளிதாக கிடைத்துவிடும் என்று பெருத்த நம்பிக்கையுடன் உள்ளோம்.. காரணம், மொத்தத்தையும் மாற்றிவிடக்கூடிய சக்தி, கல்விக்கு மட்டுமே உண்டு என்றும், இதன்மூலம் சமூகத்தின் முதுகெலும்பே நிமிர்ந்துவிடும் என்றும் ஆழமான நம்பிக்கையை வைத்து வருகிறோம்.. ஆனால்? என்னத்த சொல்றது?