லங்கா பிரீமியர் லீக்கின் 4 ஆவது தொடருக்கான 'வெளிநாட்டு வீரர்களின் பதிவு' ஆரம்பம்

லங்கா பிரீமியர் லீக்கின் 4 ஆவது தொடருக்கான ‘வெளிநாட்டு வீரர்களின் பதிவு’ தற்போது ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக இலங்கை கிரிக்கெட் சபை அறிவித்துள்ளது.

LPL தொடரின் நான்காவது தொடர் போட்டிகள் இந்த ஆண்டின் ஜூலை மாதம் 30ஆம் திகதி தொடக்கம் ஆகஸ்ட் 20 ஆம் திகதி வரை நடைபெறவுள்ளன.

இந்நிலையில் தொடரில் பங்கெடுக்கும் வெளிநாட்டு வீரர்களை பதிவு செய்வதற்கான பணிகளை இலங்கை கிரிக்கெட் சபை ஆரம்பித்துள்ளதாக அறிவித்துள்ளது.

இதற்கமைய வெளிநாட்டு வீரர்கள் LPL Player Registration Portal – Sri Lanka Cricket இணையதளத்தின் ஊடாக பதிவு செய்யலாம் என இலங்கை கிரிக்கெட் சபை குறிப்பிட்டுள்ளது.

இந்த இணையதளத்தின் ஊடாக பதிவு செய்யக் கூடிய வீரர்கள் சில நிபந்தனைகளையும் பூர்த்தி செய்திருக்க வேண்டும் எனக் குறிப்பிட்டுள்ள இலங்கை கிரிக்கெட் சபையானது, வெளிநாட்டு அணியொன்றுக்காக கிரிக்கெட் விளையாடிய வீரர்கள் குறிப்பிட்ட நாடு ஒன்றுக்காக குறைந்தது ஒரு டெஸ்ட், ஒருநாள் அல்லது ரி20ஐ போட்டி ஒன்றில் விளையாடியிருக்க வேண்டும்.

எனினும், இவ்வாறு வெளிநாட்டு அணியொன்றுக்காக கிரிக்கெட் விளையாடியிருக்காத வீரர்கள் முதல்தர போட்டிகளிலோ அல்லது ஐ.சி.சி. இன் அங்கத்துவம் பெற்ற நாடொன்று நடாத்தும் ரி20 தொடர் ஒன்றில் விளையாடி இருக்க வேண்டும்

இதேவேளை, இலங்கை கிரிக்கெட் அணிக்காக விளையாடிய முன்னாள் வீரர்களும் LPL தொடரில் பங்கெடுக்க முடியும் எனக் கூறப்பட்டிருப்பதோடு, இந்த வீரர்கள் தற்போது நடைபெற்று வரும் உள்ளூர் ரி20 தொடர்களில் விளையாடி வர வேண்டும்.

இலங்கை அணியின் முன்னாள் வீரர்களும், மேற்குறிப்பிட்ட இணைய இணைப்பின் மூலமாக LPL போட்டிகளில் விளையாடுவதற்கு தம்மை பதிவு செய்து கொள்ள முடியும் எனக் கூறப்பட்டிருக்கின்றது.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.