ஹிந்துஜா குழுமத்தின் தலைவர் எஸ்.பி. ஹிந்துஜா லண்டனில் காலமானார்..!

ஐரோப்பா மற்றும் இந்தியாவில் பிரம்மாண்ட வர்த்தகச் சாம்ராஜ்ஜியத்தை நடத்திவரும் ஹிந்துஜா குரூப், பிரிட்டனின் மிகப்பெரிய வர்த்தகக் குழுமமாக விளங்குகிறது.

ஹிந்துஜா குழுமத்தின் நான்கு சகோதரர்களில் மூத்தவரும் ஹிந்துஜா குழுமத்தின் தலைவருமான எஸ்பி ஹிந்துஜா என அழைக்கப்படும் ஸ்ரீசந்த் பிரேமானந்த் ஹிந்துஜா சில காலமாக உடல்நலம் பாதிக்கப்பட்டு இருந்த நிலையில், 87 வயதில் லண்டனில் இன்று காலமானார்.

எஸ்.பி. ஹிந்துஜா

எஸ்.பி. ஹிந்துஜா என அழைக்கப்படும் ஸ்ரீசந்த் பர்மானந்த் ஹிந்துஜா 1935 -ம் ஆண்டு நவம்பர் 28 -ம் தேதி அன்றைய பிரிட்டிஷ் இந்தியாவின் சிந்து மாகாணத்தில் உள்ள கராச்சியில் பிறந்தார். இவர், மும்பையில் உள்ள தாவர் வணிகவியல் கல்லூரி மற்றும் ஆர்.டி. தேசியக் கல்லூரியில் பட்டம் பெற்றார்.

எஸ்.பி. ஹிந்துஜாவின் தந்தை அப்போதைய பம்பாய் மற்றும் ஈரான் நாட்டின் தெஹ்ரானில் வர்த்தகம் செய்து வந்தார். இவருடைய ஆரம்பகால வாழ்க்கையில், இந்தியாவில் இருந்து ஈரானுக்கு வெங்காயம், உருளைக்கிழங்கு போன்ற உணவுப் பொருள்கள் மற்றும் இரும்புத் தாது ஆகியவற்றை விற்பனை செய்தனர்.  இவர் தனது தந்தையின் ஜவுளி மற்றும் வர்த்தகத் தொழில்களில் தனது வாழ்க்கையைத் தொடங்கினார்.

1964 -ல் எஸ்.பி. ஹிந்துஜா, ராஜ் கபூர் நடித்த ‘சங்கம்’ திரைப்படத்தை மத்திய கிழக்கு சந்தைகளில் விநியோகித்தார். இதன் மூலம் மில்லியன் டாலர்களை சம்பாதித்தார். ஆனால் போஃபர்ஸ் ஊழல் வழக்குதான் எஸ்.பி. ஹிந்துஜாவை மிகவும் பிரபலமாக்கியது.

முன்னாள் பிரதமர்  இந்திரா காந்திக்கு ஈரானின் ஷாவுடன் எண்ணெய் விலையில் கருத்து வேறுபாடு ஏற்பட்டபோது, எஸ்.பி. ஹிந்துஜா மற்றும் அவரது சகோதரர்கள் ஈரானிய மன்னரின் வாய்ப்பைப் பயன்படுத்தி பாரசீக வளைகுடா நாட்டிற்கு இந்திய ஏற்றுமதியை அதிகரிக்கவும், இரும்புத் தாதுக்களை சரக்குகளுக்கு அனுப்பவும் செய்தனர்.

எஸ்.பி. ஹிந்துஜா

 1980 -ல் அவர்கள் இந்திய நிறுவனமான அசோக் லேலண்டில் பங்குகளை வாங்கினார்கள்.1993 -ல் எஸ்.பி. ஹிந்துஜா IndusInd வங்கியுடன் வங்கிப்பணியில் இறங்கினார். வங்கி திறப்பு விழாவுக்கு அப்போதைய நிதி அமைச்சர் மன்மோகன் சிங் அழைக்கப்பட்டார்.

அடுத்த ஆண்டில், சுவிட்சர்லாந்தில் உள்ள ஜெனிவாவில் தலைமையகத்தைக் கொண்டு எஸ்.பி. ஹிந்துஜா பாங்க் பிரீவி (SP Hinduja Banque Privee) என்ற இந்தியருக்குச் சொந்தமான ஒரே சுவிஸ் வங்கியை அவர் நிறுவினார்.

போஃபர்ஸ் ஊழல் இந்தியாவை உலுக்கிய நேரத்தில் இவையெல்லாம் நடந்தன. இந்திய ராணுவத்திற்கு 400 யூனிட் 155 மிமீ ஹோவிட்சர் துப்பாக்கிகளை வழங்குவதற்கான ₹ 1,437 கோடி மதிப்பிலான ஒப்பந்தம் மார்ச் 24, 1986 அன்று போடப்பட்டது.

ஏப்ரல் 16, 1987 -ல் ஸ்வீடிஷ் வானொலி, இவர்களது நிறுவனம் உயர்மட்ட இந்திய அரசியல்வாதிகள் மற்றும் பாதுகாப்புப் பணியாளர்களுக்கு லஞ்சம் கொடுத்ததாகக் கூறியது. இதனால், ஏபி போஃபர்ஸ் நிறுவனத்தின் அப்போதைய தலைவர் மார்ட்டின் அர்ப்டோ, இடைத்தரகர் என்று கூறப்படும் வின் சந்தா மற்றும் இந்துஜா சகோதரர்கள் மீது சிபிஐ வழக்கு பதிவு செய்தது.

எஸ்.பி. ஹிந்துஜா

2005 – ம் ஆண்டு ஸ்ரீசந்த், கோபிசந்த் மற்றும் பிரகாஷ் ஹிந்துஜா ஆகிய மூன்று பேர் மீதும் எந்த குற்றமும் இல்லை என்று டெல்லி உயர் நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியது.

எஸ்பி ஹிந்துஜா மறைவு குறித்து அவரது குடும்பத்தினர் வெளியிட்ட அறிக்கையில், “ இங்கிலாந்து – இந்தியா இடையே வலுவான உறவைக் கட்டியெழுப்புவதில் எஸ்.பி ஹிந்துஜா தனது சகோதரர்களுடன் இணைந்து மிக முக்கியப் பங்காற்றினார். அவருடைய மறைவு எங்கள் குடும்பத்தை மிகுந்த சோகத்தில் ஆழ்த்தியுள்ளது” என தெரிவித்துள்ளனர்.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.