சென்னை: சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் உருவாகி வரும் ஜெயிலர் படத்தின் ரிலீஸ் தேதி அறிவிக்கப்பட்ட நிலையில், அனிருத் இசையில் உருவாகி வரும் இந்த படத்தின் ஆடியோ வெளியீட்டு விழா குறித்த ஹாட்டான அப்டேட்கள் கசிந்துள்ளன.
லேடி சூப்பர் ஸ்டார் நயன்தாராவின் கோலமாவு கோகிலா படத்தை இயக்கி இயக்குநராக அறிமுகமான நெல்சன் சிவகார்த்திகேயனின் டாக்டர், விஜய்யின் பீஸ்ட் படங்களை இயக்கி உள்ளார்.
பீஸ்ட் படம் சொதப்பிய நிலையில், ஜெயிலர் படத்தின் மூலம் கம்பேக் கொடுக்க காத்திருக்கிறார்.
ஒரே படத்தில் பல சூப்பர்ஸ்டார்களை இயக்கும் நெல்சன்: ஜாக்பாட் அடிச்சது போல இயக்குநருக்கு ரஜினிகாந்தின் ஜெயிலர் படத்தை இயக்கும் வாய்ப்பே பெரிய வாய்ப்பு என ரசிகர்கள் நினைத்துக் கொண்டிருக்க அந்த படத்தில் ரஜினிகாந்த், சிவராஜ்குமார், மோகன்லால் என ஒரே படத்தில் 3 சூப்பர்ஸ்டார்களை இயக்கி உள்ளார் நெல்சன்.
இப்படியொரு வாய்ப்பு பெரிய இயக்குநர்களுக்கே கிடைக்காத நிலையில், இளம் இயக்குநரான நெல்சனுக்கு கிடைத்துள்ளது மிகப்பெரிய விஷயம் என்றே கோலிவுட்டில் பலரும் வியந்து பாராட்டி வருகின்றனர்.
ஜெயிலர் ரிலீஸ் தேதி: சிவகார்த்திகேயனின் மாவீரன் படம் ஏற்கனவே புக் செய்திருந்த ஆகஸ்ட் மாதத்தில் ரஜினிகாந்தின் ஜெயிலர் அதிரடியாக என்ட்ரி கொடுத்த நிலையில், மாவீரன் திரைப்படம் முன்கூட்டியே ரிலீஸ் ஆக முடிவெடுத்து புதிய ரிலீஸ் தேதியும் அறிவித்தனர்.
ரஜினிகாந்த், தமன்னா, ரம்யா கிருஷ்ணன், சிவராஜ் குமார், மோகன்லால், சுனில், ஜாக்கி ஷெராஃப், சந்தோஷ் பிரதாப், யோகி பாபு உள்ளிட்ட பலர் நடிப்பில் உருவாகி வரும் ஜெயிலர் திரைப்படம் வரும் ஆகஸ்ட் மாதம் 10ம் தேதி வெளியாகிறது.
ஜெயிலர் ஆடியோ வெளியீட்டு விழா: தர்பார் படத்தைத் தொடர்ந்து ரஜினிகாந்தின் ஜெயிலர் படத்துக்கு அனிருத் இசையமைத்து வரும் நிலையில், அந்த படத்தின் ஃபர்ஸ்ட் சிங்கிள் எப்போ ரிலீஸ், ஆடியோ வெளியீட்டு விழா எப்போ என கேள்விகள் எழுந்துள்ளன.
இந்நிலையில், வரும் ஜூன் மாதம் 2வது வாரத்தில் ஜெயிலர் படத்தின் ஃபர்ஸ்ட் சிங்கிள் அனிருத்தின் குரலில் வெளியாகும் என்றும் ஜெயிலர் படத்தின் ஆடியோ வெளியீட்டு விழா நேரு உள்விளையாட்டு அரங்கில் வரும் ஜூலை மாதம் கடைசியில் பிரம்மாண்டமாக நடைபெறும் என தகவல்கள் வெளியாகி உள்ளன. பாலிவுட் நடிகர் அமிதாப் பச்சனை ஆடியோ வெளியீட்டு விழாவுக்கு அழைத்து வரவும் பேச்சுவார்த்தைகள் அடிபட்டு வருவதாக கூறுகின்றனர்.