காத்மாண்டு நேபாளத்தைச் சேர்ந்த பிரபல மலையேறும் வீரர் கமி ரிட்டா, உலகின் மிக உயரமான ‘எவரெஸ்ட்’ சிகரத்தில், 27 முறை ஏறி சாதனை படைத்துள்ளார்.
நம் அண்டை நாடான நேபாளத்தில், உலகின் மிக உயரமான எவரெஸ்ட் சிகரம் உள்ளது. இதன் உயரம் 29 ஆயிரத்து 32 அடி.
இந்நிலையில், இங்குள்ள சோலுகும்பு மாவட்டத்தைச் சேர்ந்த பிரபல மலையேறும் வீரர் கமி ரீட்டா, 53, நேற்று, 27வது முறையாக, எவரெஸ்ட் சிகரத்தில் ஏறி சாதனை படைத்துஉள்ளார்.
மலையேற்றத்துக்கு வருபவர்களுக்கு வழிகாட்டியாக இருந்த கமி ரிட்டா, முதன் முதலில், 1994 மே 13ல், எவரெஸ்ட் சிகரத்தில் ஏறினார். 2022ல், 26வது முறையாக எவரெஸ்ட் சிகரத்தில் அவர் ஏறினார்.
சமீபத்தில், மற்றொரு மலையேற்ற வீரரான, நேபாளத்தைச் சேர்ந்த பசாங் தவா, 26வது முறையாக எவரெஸ்ட் சிகரம் ஏறி, கமி ரிட்டாவின், 26 முறை சாதனையை சமன் செய்தார். அவரை முந்தும் வகையில், நேற்று, 27வது முறையாக எவரெஸ்ட் சிகரம் ஏறி கமி ரிட்டா சாதனை படைத்து, தன் சொந்த சாதனையையும் முறியடித்துள்ளார்.
நேபாளத்திலும், வெளி நாடுகளிலும் 26 ஆயிரம் அடி உயரமான பல மலைகளில் ஏறி சாதனை படைத்துள்ள கமி ரிட்டா, மவுன்ட் கே 2, மவுன்ட் சோ ஓயு, மவுன்ட் லோட்சே மற்றும் மனாஸ்லு உள்ளிட்ட பிரபலமான சிகரங்களிலும் ஏறி உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement