சென்னை: Modern Love (மாடர்ன் லவ்) மாடர்ன் லவ் ஆந்தாலஜியில் லாலா குண்டா பொம்மைகள் எப்படி இருக்கும் என இயக்குந்ர ராஜுமுருகன் தமிழ் பில்மிபீட்டுக்கு சிறப்பு பேட்டி அளித்திருக்கிறார்.
மாடர்ன் லவ் சென்னை என்கிற ஆந்தாலஜி வெப் தொடரை இயக்குநர்கள் பாரதிராஜா, ராஜுமுருகன், பாலாஜி சக்திவேல், தியாகராஜா குமாரராஜா, அக்ஷய் சுந்தர், கிருஷ்ணகுமார் ராம்குமார் ஆகிய ஆறு இயக்குநர்கள் இயக்கியிருக்கின்றனர். இந்த ஆந்தாலாஜி தொடரானது மொத்தம் 6 அத்தியாயங்களை கொண்டது என்பது குறிப்பிடத்தக்கது.
முதல் அத்தியாயம்: இந்த வெப் தொடரின் முதல் அத்தியாயமாக லாலா குண்டா பொம்மைகள் உருவாகியிருக்கிறது. இதனை குக்கூ, ஜோக்கர் உள்ளிட்ட படங்களை இயக்கிய ராஜுமுருகன் இயக்கியிருக்கிறார். இசையமைப்பாளர் ஷான் ரோல்டன் இசையமைத்திருக்கிறார். வாசுதேவன் முரளி, ஸ்ரீ கௌரி பிரியா, வசுந்தா உள்ளிட்டோர் நடித்திருக்கின்றனர். இந்தச் சூழலில் லாலா குண்டா பொம்மைகள் டீம் தமிழ் பில்மிபீட்டுக்கு சிறப்பு பேட்டி அளித்தனர். அப்போது இயக்குநர் ராஜுமுருகன் பேசியதாவது:
நான் செய்த பயணங்கள்தான் என்னை சினிமாவுக்குள் கொண்டு வந்திருக்கிறது. பயணங்கள், புத்தகங்கள் வாசிப்பதுதான் கிரியேஷனை கொடுக்கும். 20 வருடங்களாகவே எனக்கு பயணங்கள் மீதும், புத்தகங்கள் வாசிப்பதும் விருப்பமான ஒன்றாக இருந்தது. பயணத்தின்போதுதான் நிறைய பேரை பார்க்க முடியும். மனிதர்களை நாம் படிப்பது குறைந்துவிட்டது. நான் பயணிப்பதாலும், அதை கலைக்குள் நான் வைப்பதாலும்தான் எனது வாழ்க்கை உயிரோட்டமானதாக இருக்கிறது என்று நினைக்கிறேன்.
மூன்று வருட கேப் ஏன்?: உலகமே கொரோனாவால் மூன்று வருட இடைவெளியில் இருந்தது. எல்லோரும் வீடுகளில்தான் இருந்தார்கள். அடுத்தடுத்து படங்கள் செய்வதுதான் எனது ஐடியா அதனால் இந்த கேப் விழுந்தது. இந்த காலகட்டத்தில் ஓடிடி நிறையவே வளர்ந்துவிட்டது. நிறைய படங்கள் பார்க்க முடிந்தது. முக்கியமாக எனது சிந்தனையிலேயே மாற்றம் வந்துவிட்டது. இந்த மூன்று வருட இடைவெளி ஒரு படைப்பாளியாக புத்துணர்ச்சி கொடுக்கக்கூடியதாக இருந்தது.
சினிமா நிறையவே மாறிருக்கு: கோவிட் காலகட்டத்துக்கு பிறகு சினிமாவில் நிறைய மாற்றங்கள் நிகழ்ந்துள்ளன. வாழ்க்கை நிரந்தரம் இல்லை என்பதைத்தான் கோவிட் உணர்த்தியிருக்கிறது. ஆனால் பாருங்கள் கோவிட்டுக்கு பிறகுதான் ரியல் எஸ்டேட் விலை உயர்கிறது. பணத்தின் மதிப்பு அதிகரிக்கிறது. எல்லோரும் பிஸ்னெஸ் என்ற மைண்ட் செட்டுக்குள் சென்றுவிட்டார்கள். அமெரிக்காவின் படம் இங்கு வருகிறது. இங்கு உருவாக்கப்படும் படம் அங்கு செல்கிறது. எனவே வியாபாரம் பெருகிவிட்டது. அதற்காக படங்கள் செய்ய வேண்டியதாக இருக்கிறது.
லாலா குண்டா பொம்மைகள் எப்படி இருக்கும்: இந்த ஆந்தாலஜியில் நான் இயக்கியிருக்கும் லாலா குண்டா பொம்மைகள் எங்கு வேண்டுமானாலும் நடக்கும் கதையாகத்தான் இருக்கும். லாலா குண்டா என்பது சென்னையில் இருக்கும் ஒரு ஏரியாவின் பெயர். அங்கு பட்டர் பிஸ்கெட் செய்யும் கம்பெனிகள் அதிகம் இயங்குகின்றன. அந்த ஏரியா குறித்து எனது தோழர் மூலம் தெரியவந்தது. அங்கு தெலுங்கர்கள், தமிழர்கள், இஸ்லாமியர்கள் என பலர் வாழ்கின்றனர். சொல்லப்போனால் ஒரு குட்டி இந்தியாவாக எனக்கு தெரிந்தது. அதனால் இந்த கதையை அங்கு நடப்பது போல் செய்தேன்” என்றார்.