`பத்து தல’ படத்திற்குப் பிறகு ராஜ்கமல் நிறுவனத்தின் தயாரிப்பில் `கண்ணும் கண்ணும் கொள்ளையடித்தால்’ படத்தின் இயக்குநர் தேசிங்கு பெரியசாமியின் இயக்கத்தில் சிலம்பரசன் நடிக்கிறார்.
STR48 படத்தின் ப்ரீ புரொடக்ஷன் வேலைகள் மும்முரமாக நடந்து வருகின்றன. இது குறித்து சிம்புவின் வட்டாரத்தில் விசாரித்ததில் கிடைத்த தகவல்கள் இதோ…
`மாநாடு’ படத்தின் வெற்றிக்குப் பிறகு புதிய படத்துக்கான கதைகள் தேர்வில் கவனம் செலுத்தினார் நடிகர் சிலம்பரசன். இதற்கிடையில் கௌதம் மேனனின் `வெந்து தணிந்தது காடு’, ஓபிலி என்.கிருஷ்ணாவின் `பத்து தல’ படங்களில் கமிட் ஆனார். இதற்கு முன்னரே கமலின் தயாரிப்பில் ஒரு படத்தில் நடிப்பதற்கான பேச்சுவார்த்தையும் போய்க்கொண்டிருந்தது. `பத்து தல’ படப்பிடிப்பிலேயே `எஸ்.டி.ஆர் 48′ படத்தை தயாரிக்கவிருப்பது ராஜ்கமல் நிறுவனம் என்றும், தேசிங்கு பெரியசாமி கூட்டணியும் உறுதியானது.
சிலம்பரசனின் படங்களிலேயே இது ஒரு வித்தியாசமான படமாக அமையும் என்றும், படத்தில் ஃப்ளாஷ்பேக்கில் வரலாற்று பின்னணியில் ஒரு கதை இருக்கிறது என்றும் சொல்கிறார்கள். இதற்காகத்தான் சிலம்பரசன், ‘பத்து தல’யை முடித்துக் கொடுத்துவிட்டு தாய்லாந்து சென்றார் என்றும், அங்கு சில மாதங்கள் தங்கிருந்து உடல் எடையை குறைத்ததுடன், தற்காப்பு கலைகளைக் கற்றிருக்கிறார். இப்போது கேரக்டரை இன்னும் மெரூகேற்ற அவர் லண்டன் சென்றிருக்கிறார் என்றும் சொல்கிறார்கள். சில வாரங்கள் அவர் லண்டனில் இருப்பார். இதற்கிடையே படத்தின் இயக்குநர் லொக்கேஷன் தேடுதல் வேட்டையில் மும்முரமாக இறங்கியிருக்கிறார்.
சிம்புவின் ஜோடியாக நடிக்க, கீர்த்தி சுரேஷ், ப்ரியா பவானி சங்கர், அனு இமானுவேல் உள்பட பலரும் பட்டியலில் உள்ளதாகச் சொல்கிறார்கள். இன்னும் சில வாரங்களில் லொகேஷன் மற்றும் இதர நடிகர்கள் முடிவாகி விடுவார்கள் என்றும் அனேகமாக ஜூலையில் படப்பிடிப்பு தொடங்கும் என்றும் சொல்கின்றனர்.