விஜய்யின் 68-வது படத்தை வெங்கட்பிரபு இயக்குகிறார் என்றும் அதை ஏஜிஎஸ் நிறுவனம் தயாரிக்கிறது என்றும் கோடம்பாக்கத்தில் பேச்சு ஓடிக்கொண்டிருக்கிறது. சமூக வலைதளங்களில் இதுதான் ஹாட் டாபிக் பிரபலங்களும் இதுகுறித்து ட்வீட் பதிவிட்டு வருகின்றனர். இது குறித்து விசாரித்ததில் கிடைத்த தகவல்கள் இனி..
லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விஜய், இப்போது நடித்து வரும் `லியோ’ படத்தின் படப்பிடிப்பு சென்னையில் மும்முரமாக நடந்து வருகிறது. விஜய்யைப் பொறுத்தவரையில், ஒரு படத்தில் நடித்துக் கொண்டிருக்கும்போது பாதிபடம் முடிந்த நிலையில்தான் அடுத்து நடிக்கும் படத்திற்கான கதையைக் கேட்பது வழக்கம். அல்லது, தற்போது நடந்து வரும் படத்தின் படப்பிடிப்பு வேலைகள் தொடங்கும் முன்னரே, அடுத்தடுத்த லைன் அப்களை மனதில் வைத்துக் கொள்வார்.

அவரைப் பொறுத்தவரை அவரது படங்கள் பெரிய பட்ஜெட்களில் தயாராவதால், கார்ப்பரேட் தயாரிப்பாளர்களுக்கு மட்டுமே கால்ஷீட் கொடுத்து வருகிறார். லைகா ( ‘கத்தி ‘) ஏஜிஎஸ் ( ‘பிகில்’ ) சன் பிக்சர்ஸ் ( ‘சர்கார்’, ‘பீஸ்ட்’) என மாறி மாறி படங்கள் கொடுத்து வருகிறார். இதில் ஸ்ரீ தேனாண்டாள் பிலிம்ஸ், செவன் ஸ்கிரீன் எல்லாம் திடீர் சாய்ஸ்கள். விஜய்யின் 68 -வது படத்துக்காக அவரிடம் இயக்குநர்கள் அட்லி, கார்த்திக் சுப்புராஜ், தெலுங்கு இயக்குநர் கோபிசந்த் மலினேனி எனப் பலரும் அவரிடம் கதை சொல்லியிருக்கின்றனர். யாருக்கு அடுத்த படம் இயக்கும் வாய்ப்பு என எதிர்பார்த்த நிலையில், இந்த ரேஸில் எதிர்பாராத விதமாக வெங்கட் பிரபுவும் என்ட்ரி ஆகி அடுத்த படத்தை இயக்கும் வாய்ப்பை கைப்பற்றியிருக்கிறார்.

`பிகில்’ படத்திற்கு பின் மீண்டும் விஜய்யை வைத்துப் படம் தயாரிக்க விரும்பியது ஏஜிஎஸ் நிறுவனம். இதுகுறித்து தொடர்ந்து விஜய்யிடம் பேசி வந்தனர். விஜய்யும் தன் அடுத்தடுத்த கமிட்மென்ட்களால் மற்ற நிறுவனங்களுக்கு படங்கள் செய்து வந்தார். இந்நிலையில்தான் ஏஜிஎஸை அழைத்து, தனது 68-வது படத்தைக் கொடுத்திருக்கிறார்.

ஏஜிஎஸுக்கு `பிகில்’ கொடுத்த வகையில் விஜய்யின் படத்தை இயக்க விரும்பினார் அட்லி. ஆனால், பட்ஜெட் உள்ளிட்ட காரணங்களாலும், வெங்கட்பிரபுவின் ‘மாநாடு’ சமயத்திலேயே ஏஜிஎஸ் நிறுவனம் அவரை கமிட் செய்து வைத்திருந்ததாலும் வெங்கட் பிரபுவிடம் விஜய்க்கான லைன் இருந்ததாலும் அவர் இந்த புராஜெக்ட்டிற்குள் வந்திருக்கிறார் என்றும் சொல்கிறார்கள். ஏற்கெனவே அஜித்தை வைத்து மங்காத்தா படத்தில் மிகப்பெரிய வெற்றியைக் கொடுத்தவர் வெங்கட்பிரபு. இந்நிலையில் அவர் விஜய்யுடன் இணைவது பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தியிருக்கிறது. ஏஜிஎஸ் – விஜய் – வெங்கட்பிரபு கூட்டணி குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு விஜய்யின் பிறந்தநாளான ஜூன் 22ல் வெளியாகலாம் என்றும் தகவல்.