தமிழகத்தில் பாரம்பரியமாக நடத்தப்பட்டு வரும் ஜல்லிக்கட்டுப் போட்டியில் மாடுகள் துன்புறுத்தப்படுகின்றன என பீட்டா அமைப்பு தாக்கல் செய்த மனுவை விசாரித்த உச்ச நீதிமன்றம், ஜல்லிக்கட்டுக்கு நிரந்தர தடை விதித்து தீர்ப்பு வழங்கியது.
பின்னர் அதிமுக அரசு ஜல்லிக்கட்டு போட்டிகளை நடத்த அவசர சட்டம் இயற்றவே, அதற்க்கு குடியரசு தலைவரும் ஒப்புதல் அளித்தார். அதனை தொடர்ந்து தமிழகத்தில் ஜல்லிக்கட்டு போட்டிகள் நடத்தப்பட்டு வருகின்றன.
இதற்கிடையே, ஜல்லிக்கட்டுப் போட்டி நடத்த அனுமதித்து இயற்றப்பட்ட சட்டத்தை எதிர்த்து பீட்டா, கூபா உள்ளிட்ட வெளிநாட்டு விலங்கின அமைப்புகள் உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தது.
இந்த வழக்கில் “தமிழகத்தின் கலாச்சாரத்தோடு ஒன்றிணைந்தது ஜல்லிக்கட்டு” என்பதை ஏற்று, உச்சநீதிமன்ற நீதிபதி கே.எம்.ஜோசப் தலைமையிலான அரசியல் சாசன அமர்வு இன்று தீர்ப்பு வழங்கியுள்ளது.
இந்த தீர்ப்பு குறித்து தமிழக முதல்வர் ஸ்டாலின் தனது டிவிட்டர் பக்கத்தில், “தமிழர்தம் வீரத்தையும் பண்பாட்டையும் வெளிப்படுத்தும் விளையாட்டான ஜல்லிக்கட்டு போட்டிகளை நடத்தத் தடையில்லை என்று உச்சநீதிமன்ற அரசியல் சாசன அமர்வு தீர்ப்பளித்திருப்பது தமிழ்நாட்டு வரலாற்றில் பொன்னெழுத்துகளால் பொறிக்கத்தக்கது.
தமிழ்நாடு அரசு கொண்டு வந்த அவசரச் சட்டம் செல்லும் என்பதை நிலைநாட்ட அரசு நடத்திய சட்டப் போராட்டத்துக்கு மகத்தான வெற்றி கிடைத்துள்ளது. அலங்காநல்லூரில் மாபெரும் ஜல்லிக்கட்டு மைதானத்தை நாம் கட்டி வருகிறோம். வரும் சனவரி மாதம் தமிழர் திருநாளாம் பொங்கல் திருநாளில் ஜல்லிக்கட்டு வெற்றி விழாவைக் கொண்டாடுவோம்” என்று தெரிவித்துள்ளார்.