ரோம்: இத்தாலியின் வடக்குப் பகுதியில் பெய்த கனமழை காரணமாக அங்கு வெள்ள பாதிப்பு ஏற்பட்டுள்ளது. குறிப்பாக, எமிலியா மாகாணத்தில் பெய்த கனமழையினால் அங்கு வெள்ளப் பெருக்கு ஏற்பட்டுள்ளது. மேலும், வெள்ளத்தினால் தீவிர நிலச்சரிவும் (120-க்கும் அதிகமான நிலச்சரிவு பதிவுச் செய்யப்பட்டுள்ளது) ஏற்பட்டுள்ளது. இதுவரை வெள்ளத்தில் சிக்கி 9 பேர் பலியானதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
இந்த வெள்ளத்தால் 37 நகரங்கள் பாதிக்கப்பட்டுள்ளன. மேலும், ஏராளமான விவசாய நிலங்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளன. மழையினால் ஆயிரக்கணக்கான மக்கள் தங்கள் வீடுகளிலிருந்து வெளியேறி முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர். 100-க்கும் மேற்பட்ட மக்கள் தங்கள் வீடுகளை இழந்துள்ளனர். தொடர் மழையால் ஃபார்முலா ஒன் போட்டியும் ரத்து செய்யப்பட்டுள்ளதாக இத்தாலி அரசு தெரிவித்துள்ளது.
இத்தாலியின் சில பகுதிகளில் வருடம் முழுவதும் பெய்ய வேண்டிய மழை வெறும் 36 மணி நேரத்தில் பெய்துள்ளதாக அந்நாட்டு வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
வெள்ள பாதிப்பு குறித்து எமிலியா மாகாண ஆளுநர் ஸ்டெபானோ பொனாசினி கூறும்போது, “இதுவரை பார்த்திராத பேரழிவு நிகழ்வுகளை நாங்கள் எதிர்கொள்கிறோம். பெருமளவு மழை நிலத்தில் பெய்துள்ளதால் நிலத்துக்கு அவற்றை உறிஞ்சும் திறன் இல்லாமல் சென்றுவிட்டது. மீட்புப் பணிகள் நடந்து வருகிறது” என்றார்.
காலநிலை மாற்றம் நம் கண் முன்னே அரங்கேறி வருகிறது. உலகெங்கிலும் லட்சக்கணக்கான வனவிலங்குகள் அவற்றின் பாதிப்பை உணர்ந்து வருகின்றன. மனிதர்களும் அதன் தீவிரவத்தை கடந்த பத்து ஆண்டுகளாக எதிர்கொண்டு வருகின்றனர். இவற்றை எல்லாம் கவனத்தில் கொண்டு பூமி வெப்பமடைதலை குறைப்பதற்கான செயல்பாடுகளை விரைவாக நகர்த்த வேண்டிய சூழலில் மனித இனம் உள்ளது என்ற எச்சரிக்கையை சுற்றுச் சூழல் செயற்பாட்டாளர்கள் தொடர்ந்து எழுப்பி வருகின்றனர்.