ஈரோடு மாவட்டம், பெருந்துறை தி.மு.க இளைஞரணி அமைப்பாளராக இருப்பவர் சந்தோஷ். இவர் தன்னுடைய நண்பர்களான ஜிப்சன், வினோத் ஆகியோருடன் கடந்த ஞாயிற்றுக்கிழமை இரவு மது அருந்தியிருக்கிறார்.
பின்னர், மூவரும் பெருந்துறையிலிருந்து பவானிக்குச் செல்லும் சாலையில் இரு சக்கர வாகனத்தில் சென்றுகொண்டிருந்தபோது, போதை தலைக்கேறிய சந்தோஷ் திடீரென கீழே குதித்து சாலையோரம் வைக்கப்பட்டிருந்த குப்பைத்தொட்டியை எட்டி உதைத்திருக்கிறார்.
பின்னர், பேருந்து நிறுத்தத்தில் வீட்டுக்குச் செல்வதற்காக அமர்ந்திருந்த உணவக ஊழியர் முருகேசன் என்பவரைக் கடுமையாகத் தாக்கியதுடன், தகாத வார்த்தைகளால் திட்டிக் கொலை மிரட்டல் விடுத்திருக்கிறார். இதில், பலத்த காயமடைந்து பெருந்துறை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருக்கிறார் முருகேசன்.
இது தொடர்பாக முருகேசன் அளித்த புகாரின் அடிப்படையில், சிசிடிவி கேமராவில் பதிவான காட்சிகளின் அடிப்படையில், சந்தோஷ் மீது குடிபோதையில் ஆபாசமாகப் பேசியது, தாக்கியது, கொலை மிரட்டல் விடுத்தது உள்ளிட்ட பிரிவுகளில் வழக்கு பதிவுசெய்து தலைமறைவாக இருக்கும் சந்தோஷைத் தேடிவருகின்றனர்.