ஐந்து ஆண்டுக்கு பிறகு கோலாகலமாக தொங்கும் ஏலகிரி கோடை விழா – எப்போது தெரியுமா?
ஒவ்வொரு வருடமும் கோடைக் காலம் ஆரம்பமானதும் ஏலகிரி மலைக்கு ஏராளமான சுற்றுலாப் பயணிகள் வருகை புரிகின்றனர். அப்போது மாவட்ட நிர்வாகம் சார்பில் ஒவ்வொரு ஆண்டும் இரண்டு நாட்கள் கோடை விழா நடத்துவது வழக்கம். ஆனால் கடந்த இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு ஏற்பட்ட கொரோனா தோற்று மற்றும் கோடை விழா அரங்கம் கட்டுதல் உள்ளிட்ட சில காரணங்களால் கடந்த ஐந்து ஆண்டுகளாக இந்த விழா நடைபெறவில்லை.
இந்தநிலையில், இந்த ஆண்டு கோடை விழா நடத்துவது குறித்து மாவட்ட ஆட்சியர் பாஸ்கரன் பாண்டியன் தலைமையில் ஆட்சியர் அலுவலகத்தில் அனைத்து துறை அதிகாரிகளுடன் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது.
அந்தக் கூட்டத்தில் ஆட்சியர் பாஸ்கர பாண்டியன் பேசியதாவது:- “ஏலகிரி மலையில் கடந்த ஐந்து ஆண்டுகளுக்கு பிறகு இந்த ஆண்டு கோடை விழாக்கள் இந்த மாதம் 27, 28 உள்ளிட்ட இரண்டு நாட்கள் மிகச் சிறப்பாக நடத்த வேண்டும். இதற்காக விழா கலையரங்கம் முன்பும், ஏலகிரி மலை அடிவாரத்திலும் அலங்கார வளைவு அமைக்க வேண்டும்.
இயற்கை பூங்காவில் தோட்டக்கலைத் துறை சார்பில் காய்கறிகளைக் கொண்டு விலங்குகள் மற்றும் பறவைகள் உள்ளிட்ட உருவங்களை அமைக்க வேண்டும். சுற்றுலாப் பயணிகளின் வசதிக்காக திருப்பத்தூர், வாணியம்பாடி, வேலூர் உள்ளிட்ட பகுதிகளில் இருந்து ஏலகிரி மலைக்கு சிறப்பு பேருந்துகள் இயக்க வேண்டும்.
ஏலகிரியில் போக்குவரத்தை கட்டுப்படுத்தும் விதமாக வெளியூர்களில் இருந்து கார்களில் வரும் சுற்றுலா பயணிகள் மலை அடிவாரத்தில் காரை நிறுத்திவிட்டு பேருந்தில் மலைக்கு வர வேண்டும். அவ்வாறு வருபவர்களுக்கு பரிசுகள் வழங்க வேண்டும். கார் நிறுத்துவதற்காக மலை அடி வாரத்திலும் பார்க்கிங் வசதி ஏற்படுத்த வேண்டும்.
அனைவரும் கண்டு கழிக்கும் விதமாக கலை நிகழ்ச்சிகள் நடத்த வேண்டும். அந்த நிகழ்ச்சியில் நாட்டுப்புற கலைஞர்களுக்கு முக்கியத்துவம் வழங்க வேண்டும் என்று பல நிபந்தனைகளை விதித்து பேசியுள்ளார்.