விழுப்புரம் மாவட்டம் மரக்காணத்தை எக்கியார் குப்பம் மற்றும் செங்கல்பட்டு பகுதியில் கள்ள சாராயம் குடித்து 20 க்கும் மேற்பட்டோர் உயிரிழந்தனர். இந்த சம்பவம் தமிழகம் முழுவதும் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது. இதைத்தொடர்ந்து கள்ளச்சாராயத்தை ஒழிக்க தமிழ்நாடு முழுவதும் போலீசார் தீவிர வேட்டையில் இறங்கியுள்ளனர்.
கள்ளச்சாராயம் காய்ச்சுபவர்கள் விற்பனை செய்பவர்கள் என ஏராளமானோர் கைது செய்யப்பட்டுள்ளனர். இந்நிலையில் இந்த நடவடிக்கை எடுத்து பல்வேறு வழக்குகளை பதிவு செய்து ஏராளமானோரை கைது செய்து வருகின்றனர். மேலும் கள்ளச்சாராயத்தை கடத்துபவர்கள் மீது கடுமையான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
இந்நிலையில், கள்ளச்சாராய விவகாரம் குறித்து கவிஞர் வைரமுத்து தனது டிவிட்டர் பக்கத்தில் உருக்கமாக பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில் அவர் தெரிவித்திருப்பதாவது,
சாராயம்
ஒரு திரவத் தீ
கல்லீரல் சுட்டுத்தின்னும்
காட்டேரி
நாம் விரும்புவது
கள்ளச் சாராயமற்ற
தமிழ்நாட்டை அல்ல;
சாராயமற்ற தமிழ்நாட்டை
மாநில அரசு
கடுமை காட்டினால்
கள்ளச் சாராயத்தை
ஒழித்துவிடலாம்
ஒன்றிய அரசு
ஒன்றிவந்தால்
சாராயத்தையே ஒழித்துவிடலாம்.. என கூறியுள்ளார்.
இதனிடையே தமிழ்நாட்டில் கள்ளச்சாராய தடுப்பு நடவடிக்கைகள் குறித்து, முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் சென்னை தலைமை செயலகத்தில் நேற்று ஆய்வுக் கூட்டம் நடைபெற்றது. இதில், கள்ளச்சாராயம் மற்றும் போதைப் பொருட்களை தொடர்ந்து விற்பனை செய்பவர்கள் மீது பாரபட்சமின்றி குண்டர் சட்டத்தில் நடவடிக்கை எடுக்க உத்தரவிடப்பட்டது.
மேலும் கள்ளச்சாராயம் மற்றும் போதைப் பொருட்களால் ஏற்படும் தீமை குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தவும் முதல்வர் ஸ்டாலின் அறிவுறுத்தினார். அதோடு கள்ளச்சாராயம் காய்ச்சுபவர்களை அந்த தொழிலில் இருந்து விடுவித்து அரசின் வாழ்வாதாரத் திட்டங்களின் மூலம் அவர்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்திட மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுத்திட வேண்டும் என்றும் முதல்வர் ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.