பஞ்சாப் மாநிலத்திலுள்ள ராம்புரா கிராமத்தில் கடந்த 15-ம் தேதி, அபிராஜ் ஜோத் கவுர் எனும் ஏழு வயதுச் சிறுமி காணாமல்போனார். டியூஷனுக்காக வீட்டிலிருந்து சென்ற சிறுமி வீடு திரும்பவில்லை. இதனால் சிறுமியைத் தேடும் பணியில் குடும்பத்தினர் தீவிரமாக ஈடுபட்டனர். இறுதிவரை சிறுமி கிடைக்கவில்லை. அதனால், அமிர்தசரஸின் கரிண்டா காவல் நிலையத்தில் சிறுமி காணாமல்போனது குறித்து புகார் பதிவுசெய்தனர். அதைத் தொடர்ந்து, காவல்துறை அந்தப் பகுதியின் சுற்றுவட்டாரங்களில் தீவிரமாகத் தேடினர். ஆனால், சிறுமி குறித்த எந்த தகவலும் கிடைக்கவில்லை.
#UPDATE: The 7-year-old girl who was abducted yesterday from Rampura village in #Amritsar, was killed by her step mother and was also seen in the CCTV footage taking the girl child body carried away in a bucket. https://t.co/3D2vvLdSpe pic.twitter.com/qzcYOFr6DC
— Nikhil Choudhary (@NikhilCh_) May 17, 2023
இறுதியில் கிராமத்தின் வீடுகளில் பொருத்தப்பட்டிருந்த சிசிடிவி கேமராக்களை காவல்துறையினர் ஆய்வுசெய்து விசாரணை நடத்தினர். அப்போது இருவர் அளித்த தகவலின் அடிப்படையில், சிறுமி கடத்தப்பட்டது உறுதியானது. மேலும், அவர்கள் அளித்த குறிப்பின்படி சில பகுதிகளின் சிசிடிவி கேமராக்கள் ஆய்வுக்குட்படுத்தப்பட்டன. அப்போது சிறுமியின் சித்தி (தந்தையின் இரண்டாவது மனைவி) ஜோதி கிராமத்தின் சாலை வழியே வாளியில் சடலத்தை எடுத்துச் செல்வது கேமராவில் பதிவாகியிருந்தது. அதையடுத்து விசாரித்ததில், அந்தப் பெண் சிறுமியைக் கொலைசெய்து, உடலை வாளியில் எடுத்துச் சென்று அப்புறப்படுத்தியது தெரியவந்தது.

அதைத் தொடர்ந்து, காவல்துறையினர் அவரைக் கைதுசெய்து, சிறுமியைக் கடத்த உதவியது யார்… எதற்காகக் கடத்தப்பட்டார்… எப்படி கொலை நடந்தது என விசாரித்து வருகின்றனர். இது குறித்துப் பேசிய காவல்துறை தரப்பு, “சிறுமி காணாமல்போனது முதல் தீவிரமாகத் தேடி வந்தோம். டியூஷன் முடித்து இல்லத்துக்குத் திரும்பிய சிறுமி வழியில் காணாமல்போனது தெரியவந்தது. மேலும் விசாரணையில் அவர் கடத்தப்பட்டது உறுதியானது. அதன் பிறகே அவருடைய சித்தி இந்த வழக்கில் சிக்கியிருக்கிறார். அவரைக் கைதுசெய்து விசாரித்து வருகிறோம்” எனத் தெரிவித்திருக்கிறது.