கோவை: கோயம்புத்தூரில் காணாமல்போன சிறுமி கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக காவல்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
கோயம்புத்தூர் மாவட்டம் ஒண்டிப்புதூரை சேர்ந்தவர் சுதாகரன். இவருக்கு சசிகலா என்ற மனைவியும், 12 வயதில் ஸ்ரீநிதி என்ற மகளும், ஒரு மகனும் உள்ளனர். ஸ்ரீநிதி அப்பகுதியில் ஏழாம் வகுப்பு படித்து வரும் நிலையில், கோடை விடுமுறையில் நேற்று காலை வீட்டின் முன் சகோதரன் உடன் விளையாடி கொண்டிருந்துள்ளார்.
சசிகலா வீட்டு வேலையை முடித்துவிட்டு வெளியில் வந்து பார்த்தபோது மகன் மட்டும் நின்று கொண்டிருந்தார். ஸ்ரீநிதியை காணவில்லை. உடனடியாக கணவர் தகவல் கொடுத்து இருவரும் அக்கம் பக்கத்தில் சிறுமியை தேடிப்பார்த்தும் கிடைக்கவில்லை. கோவை கிழக்கு அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் சிறுமி காணாமல் போனது குறித்து புகார் அளித்தனர். வழக்கு பதிந்து விசாரணை மேற்கொண்ட போலீஸார் கண்காணிப்பு கேமராக்களை ஆய்வு செய்தனர்.
அதில் சிறுமி ஸ்ரீநிதி, ஒண்டிப்புதூர் பேருந்து நிறுத்தத்தில் இருந்து உக்கடம் செல்லும் பேருந்து ஒன்றில் ஏறிய காட்சிகள் பதிவாகி இருந்தது. பேருந்து சென்ற வழித்தடத்திலும் உக்கடம் பேருந்து நிலையத்திலும் காவல் துறை சிறுமியை தேடியது. எனினும் அவர் கிடைக்கவில்லை. பின்னர் காவல் ஆணையர் பாலகிருஷ்ணன் உத்தரவின் பெயரில் இரண்டு தனிப்படை அமைக்கப்பட்டு தேடல் தொடங்கிய நிலையில், சிறுமியின் தந்தை மற்றும் அவரது நண்பர்கள் இணைந்து சிறுமியின் புகைப்படம், வயது, அடையாளம் என அனைத்தையும் சமூக வலைத்தளங்களில் பகிர்ந்து வந்தனர்.
இந்தப் பதிவுகள் நேற்று முதல் பலரால் பகிரப்பட்டுவந்தது கவனம் ஈர்த்தது. இந்த தகவல் தமிழ்நாடு முழுக்க வைரலாக பரவிய நிலையில் சிறுமி கண்டுபிடிக்கப்பட்டுள்ளார் என்ற தகவலை காவல்துறை வெளியிட்டுள்ளது. மேலும் ஹோட்டல் ஒன்றில் சிறுமியுடன் காவலர்கள் நிற்கும் புகைப்படம் வெளியாகியுள்ளது.
பொள்ளாச்சி பேருந்து நிலையம் அருகே சிறுமி ஸ்ரீநிதியை காவல்துறையினர் மீட்டுள்ளனர் என்றும் தற்போது சிறுமி கோவை மாநகர காவல்துறை வசம் ஒப்படைக்கபட்டார் என்றும் தகவல் வெளியாகியுள்ளன. சிறுமியை கோவை அழைத்து வரும் காவல்துறையினர் அவர் கிடைத்த தகவலை பெற்றோருக்கு தெரிவித்தனர் என்று சொல்லப்படுகிறது.