பெங்களூரு,
கர்நாடக சட்டசபை தேர்தலில் காங்கிரஸ் கட்சி 34 ஆண்டுகளுக்கு பிறகு அதிக இடங்களை கைப்பற்றி வெற்றி வாகை சூடியது. அதாவது 223 தொகுதிகளில் போட்டியிட்டு 135 இடங்களில் வெற்றி பெற்று தனிப்பெரும்பான்மை பலத்துடன் ஆட்சியை பிடித்துள்ளது.
இதனைத்தொடர்ந்து முதல்-மந்திரி பதவிக்கு சித்தராமையா மற்றும் டி.கே.சிவக்குமார் ஆகியோர் இடையே கடும் போட்டி நிலவியது.
இந்நிலையில் கர்நாடக மாநில முதல்-மந்திரியாக சித்தராமையா தேர்வு செய்யப்பட்டதாக காங்கிரஸ் அதிகாரப்பூர்வ அறிவித்துள்ளது. கர்நாடக மாநில துணை முதல்-மந்திரியாக டி.கே.சிவக்குமார் தேர்வு செய்யப்பட்டுள்ளதாக கே.சி.வேணுகோபால் அறிவித்துள்ளார். இதனால் சித்தராமையா ஆதரவாளர்கள் கர்நாடக மாநிலத்தில் கொண்டாட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
முன்னதாக டெல்லியில் செய்தியாளர்கள் சந்திப்பில் பேசிய காங்கிரஸ் கட்சியின் பொதுச் செயலாளர் கே.சி.வேணுகோபால், “கர்நாடக முதல்-மந்திரியாக சித்தராமையாவும், துணை முதல்-மந்திரியாக டி.கே.சிவக்குமாரும் தேர்வு செய்யப்பட்டுள்ளனர். ஒரு மித்த கருத்து அடிப்படையில் இருவரும் தேர்வாகி உள்ளனர். தகுதிவாய்ந்த பல தலைவர்கள் உள்ளதால் முதல்-மந்திரி யார் என்பதை தேர்வு செய்வதில் குழப்பம் ஏற்பட்டது. வரும் சனிக்கிழமை பிற்பகல் 12.30 மணிக்கு பதவியேற்பு விழா பெங்களூருவில் நடைபெறும்” என்று அவர் தெரிவித்தார்.
இதன்படி பெங்களூரில் உள்ள காண்டீரவா மைதானத்தில் முதல்-மந்திரி பதவியேற்பு விழா நாளை மறுநாள் நடைபெறுவதையொட்டி, நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளில் அதிகாரிகள் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர்.