சித்தராமையா பதவி ஏற்பில் எதிர்கட்சிகளின் சங்கமம்.. 2024 தேர்தலுக்கு முன்னோட்டம்.. மாஸ்டர் மூவ்.!

சித்தராமையா பதவி ஏற்பு விழாவில் கலந்து கொள்ள 11 எதிர்கட்சி தலைவர்களுக்கு
காங்கிரஸ்
கட்சி அழைப்பு விடுத்துள்ளது.

கர்நாடகாவில் கடந்த மே 10ம் தேதி தேர்தல் நடைபெற்றது. மொத்தம் உள்ள 224 தொகுதிகளில் பெரும்பான்மைக்கு தேவையான 113 இடங்களைக் காட்டிலும் அதிகமாக 135 தொகுதிகளில் வென்று காங்கிரஸ் கட்சி தனிப் பெரும்பான்மை பெற்றுள்ளது. இந்தநிலையில் கர்நாடகா காங்கிரஸ் எம்எல்ஏக்கள் கூட்டம் இன்று நடைபெற்றது. அதில் சித்தராமைய முதல்வராக தேர்வு செய்ய ஒருமனதாக முடிவு எடுக்கப்பட்டுள்ளது. இன்றிரவே ஆட்சியமைக்க உரிமைகோர உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

மேலும் வருகிற 20ம் தேதி சனிக்கிழமை அன்று சித்தராமையா பதவி ஏற்க உள்ளார். 2024 நாடாளுமன்ற தேர்தல் நெருங்கும் வேளையில் கர்நாடகா மாநில வெற்றி, எதிர்கட்சிகளின் ஒற்றுமைக்கு வழிவகுக்கும் என கூறப்படுகிறது. அதனால் சித்தராமையா பதவி ஏற்பு விழாவை எதிர்கட்சிகள் சந்திக்கும் கூட்டமாக நடத்த காங்கிரஸ் கட்சி முடிவு செய்துள்ளது.

அந்த வகையில் தமிழ்நாடு முதல்வர் முக ஸ்டாலின், பீகார் முதல்வர் நிதிஸ்குமார், துணை முதல்வர் தேஜஸ்வி யாதவ், தேசியவாத காங்கிரஸ் கட்சி தலைவர் சரத் பவார், மகாராஷ்டிரா முன்னாள் முதல்வர் உத்தவ் தாக்கரே, மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி, ஜார்கண்ட் முதல்வர் ஹேமந்த் சோரன், ஜம்மு காஷ்மீர் முன்னால் முதல்வர் மெஹ்பூபா முப்தி, இந்திய கம்யூனிஸ்ட் கட்சியில் டி.ராஜா, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் சீதாராம் யெச்சூரி ஆகிய தலைவர்களுக்கு பதவி ஏற்பு விழாவில் கலந்து கொள்ள அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

2024 மக்களவை தேர்தலுக்கு காங்கிரஸ் இல்லாத எதிர்கட்சிகளின் கூட்டணியை உருவாக்க நினைத்த மம்தா பானார்ஜி, தற்போது ஆதரவு தெரிவித்து வருகிறது. மாநிலத்தில் காங்கிரஸ் கட்சியை எதிர்த்தாலும், மக்களவை தேர்தலுக்கான காங்கிரஸ் கட்சியை ஆதரிக்கும் முடிவை மம்தா எடுத்துள்ளார்.

அதேபோல் காங்கிரஸ் கட்சி இல்லாத மூன்றாம் கூட்டணியை உருவாக்கத்துடிக்கும் தெலங்கானா முதல்வர் சந்திரசேகர ராவ், கேரள முதல்வர் பினராய் விஜயன், டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் ஆகியோருக்கு அழைப்பு விடுக்கப்படவில்லை. அதேபோல் எந்த நிலையையும் எடுக்காத ஆந்திரா முதல்வர் ஜெகன் மோகன் ரெட்டிக்கும் பதவி ஏற்பு விழாவிற்கு அழைப்பு விடுக்கப்படவில்லை. இந்த பதவி ஏற்பு விழாவின் மூலம் எதிர்கட்சிகளின் ஒற்றுமையை உறுதி செய்ய பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளது.

2024 தேர்தலை எதிர்கொள்ள காங்கிரஸ் அல்லாத மூன்றாம் கூட்டணி அமைந்தால், அது பாஜகவிற்கே சாதகமாகிவிடும் என தமிழ்நாடு முதல்வர், பீகார் முதல்வர் ஆகியோர் தொடர்ந்து பேசி வரும் நிலையில், சனிக்கிழமை பதவி ஏற்பு விழா என்பது மிகுந்த முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்படுகிறது.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.