அதிமுக ஆட்சியின் போது போக்குவரத்து துறை அமைச்சராக இருந்த செந்தில் பாலாஜி அரசு வேலை வாங்கி தருவதாக கூறி 81 பேரிடம் 1.62 கோடி ரூபாய் மோசடி செய்ததாக குற்றசாட்டு எழுந்தது. இது தொடர்பாக கணேஷ் குமார், தேவசகாயம், அருண்குமார் உள்ளிட்டோர் சென்னை காவல் ஆணையரிடம் புகார் அளித்தனர். மத்திய குற்றப்பிரிவு போலீசார் பதிவு செய்த இந்த வழக்கு சென்னை சிறப்பு நீதிமன்றத்தில் நடந்து வந்தது. முன்னதாக செந்தில் பாலாஜியின் வீட்டில் மத்திய குற்றப்பிரிவு ரைடு நடத்தியது.
இந்நிலையில், கடந்த 2021 ஆண்டு ஜூலை 27ம் தேதி இந்த வழக்கு சிறப்பு நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தபோது, திமுக அமைச்சர் செந்தில்பாலாஜி ஆஜராகவில்லை. அதற்கு கண்டனம் தெரிவித்த நீதிபதி, அமைச்சர் என்பதால் நீதிமன்றத்தில் ஆஜராவதற்கு விலக்களிக்கவோ சலுகை வழங்கவோ முடியாது; வரும் ஆகஸ்ட் 8ம் தேதி செந்தில்பாலாஜி ஆஜராக வேண்டும் என்று உத்தரவிட்டு வழக்கை அன்றைய தேதிக்கு ஒத்திவைத்தார்.
வழக்கு விசாரணைக்கு வந்தபோது, செந்தில்பாலாஜி பணத்தை திருப்பி கொடுத்துவிட்டதாக கூறி வழக்கை வாபஸ் பெறுவதாக சொல்ல செந்தில் பாலாஜி மீதான வழக்கு முடித்து வைக்கப்பட்டது. இந்நிலையில், இதனை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யப்பட்டது.
இந்த வழக்கு அண்மையில் விசாரணைக்கு வந்தபோது அமைச்சர் செந்தில் பாலாஜி மற்றும் பிறருக்கு அமலாக்க இயக்குனரகம் பிறப்பித்த சம்மனை ரத்து செய்த சென்னை உயர் நீதிமன்றத்தின் உத்தரவை நீதிபதிகள் ரத்து செய்ததோடு, செந்தில்பாலாஜி மீது உயர்மட்ட விசாரணையை தொடரலாம் என உத்தரவிட்டது. மேலும், தேவைப்பட்டால், சிறப்பு புலனாய்வுக் குழுவை அமைத்து விசாரணையை தொடங்க வேண்டும் என்றும் உச்ச நீதிமன்றம் அதிரடி உத்தரவை பிறப்பித்துள்ளது.
இதனால் மீண்டும் செந்தில்பாலாஜியின் வழக்கு மிக தீவிரமாகவுள்ள நிலையில் அமைச்சர் பதவியில் செந்தில்பாலாஜி நீடிக்கலாமா என்ற கேள்வி எழுகிறது.
இந்த நிலையில், பிரபல யூடியூபர் சவுக்கு சங்கர் தனது ட்விட்டர் பக்கத்தில் பரபரப்பான தகவலை வெளியிட்டுள்ளார். அதில், அமைச்சர் செந்தில் பாலாஜியை அமைச்சரவையில் இருந்து நீக்க வலியுறுத்தி தமிழக ஆளுநரை தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை சந்திக்கவுள்ளார். உச்ச நீதிமன்றமே இந்த வழக்கில் செந்தில்பாலாஜிக்கு எதிராக காட்டமாக உத்தரவிட்டுள்ளதால் இவரை அமைச்சரவையில் நீடிப்பது குறித்து தமிழக ஆளுநர் தீவிர கவனம் செலுத்தி வருவதாக கூறப்படுகிறது.
மேலும், விசாரணையை 2 மாதங்களுக்குள் முடிக்க உச்சநீதிமன்றம் கெடு விதித்துள்ளது. அண்ணாமலை நேற்று வெளியிட்ட அறிக்கையில், செந்தில் பாலாஜி அமைச்சரவையில் நீடிப்பதால் நியாயமான விசாரணை நடைபெறாது என வலியுறுத்தியுள்ளார். எனவே, செந்தில் பாலாஜியை அமைச்சரவையில் இருந்து நீக்க ஆளுநர் நடவடிக்கை எடுக்க வேண்டும் என அண்ணாமலை வலியுறுத்துவார்” என சவுக்கு சங்கர் அதில் கூறியுள்ளார்.