சென்னை: தமிழகத்தில் 10, 11 ஆம் வகுப்புகளுக்கு நாளை தேர்வு முடிவுகள் வெளியாகின்றன. இந்த நிலையில் அவற்றை எப்படி பார்க்கலாம் என்பது குறித்து தெரிந்து கொள்வோம்.
11 ஆம் வகுப்பு பொதுத் தேர்வு மார்ச் 13 முதல் ஏப்ரல் 5 ஆம் தேதி நடந்த தமிழ்நாடு, புதுச்சேரியைச் சேர்ந்த சுமார் 7.70 லட்சம் மாணவர்கள் எழுதினர். அதே போல் ஏப்ரல் 6 முதல் 20ஆம் தேதி வரை நடந்த 10 ஆம் வகுப்புக்கான பொதுத் தேர்வை சுமார் 9.40 லட்சம் மாணவர்கள் எழுதினர்.
தொடர்ந்து விடைத்தாள்களை திருத்தும் பணி, மதிப்பெண் பதிவேற்றம் உள்ளிட்ட இதர பணிகளும் முடிக்கப்பட்டுவிட்டன. இந்த நிலையில் பல்வேறு தரப்பினரின் கோரிக்கைகளை ஏற்று இந்த இரு தேர்வு முடிவுகளும் ஒரே நாளில் நாளை வெளியிடப்படுகிறது. இதை தேர்வு துறை அறிவித்தது.
அதன்படி 10,11 ஆம் வகுப்புகளுக்கான பொதுத் தேர்வு முடிவுகள் சென்னை டிபிஐ வளாகத்தில் நாளை வெளியிடப்பட்டன. 10ஆம் வகுப்பு முடிவுகள் காலை 10 மணிக்கும் 11 ஆம் வகுப்பு தேர்வு முடிவுகள் மதியம் 2 மணிக்கும் வெளியாகும். இந்த தேர்வு முடிவுகளை இணையதளம் வாயிலாக பார்க்கலாம். இதை எப்படி பார்க்கலாம் என்பதை அறிந்து கொள்வோம்.
தாங்கள் படித்த பள்ளிகள் மூலமும், மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் இயங்கும் தேசிய தகவலியல் மையங்கள் மற்றும் அனைத்து நூலகங்களிலும் கட்டணமின்றி தேர்வு முடிவுகளைப் பார்த்துக் கொள்ளலாம். மாணவர்கள், தனித்தேர்வர்கள் பதிவு செய்துள்ள செல்போன் எண்ணுக்கு எஸ்எம்எஸ் குறுஞ்செய்தி வழியாகவும் தேர்வு முடிவுகள் அனுப்பி வைக்கப்படும்.
தமிழகத்தில் 12 ஆம் வகுப்பு தேர்வு முடிவுகள் கடந்த 8ஆம் தேதி வெளியாகின. அது போல் சிபிஎஸ்இ 10, 12 ஆம் வகுப்பு தேர்வு முடிவுகள் கடந்த 12 ஆம் தேதி வெளியானது. வழக்கம் போல் இந்த தேர்வுகளில் மாணவர்களை விட மாணவிகளே அதிக தேர்ச்சி பெற்றிருந்தனர்.