தேசிய அளவில் நீர் மேலாண்மையில் 2 -வது இடம்! நாமக்கல் மாவட்டம் பிடித்தது எப்படி?

ஆண்டு தோறும் மத்திய நீர்வள ஆணையத்தினால் நீர்வள பாதுகாப்பு மற்றும் மேலாண்மையில் சிறந்து விளங்கும் மாவட்டங்களுக்கு விருதுகள் வழங்கபட்டு வருகிறது. 2022 ஆம் ஆண்டிற்கான இவ்விருதில் நாமக்கல் மாவட்டம் தேசிய அளவில் இரண்டாம் இடம் பிடித்து சாதனை புரிந்துள்ளது.

ஸ்ரேயா சிங் (நாமக்கல் ஆட்சியர்)

இதுகுறித்து நாமக்கல் மாவட்ட ஆட்சித்தலைவர் ஸ்ரேயா சிங் வெளியிட்ட அறிக்கையில்,

“நாமக்கல் மாவட்டம் தேசிய அளவில் நீர்வள பாதுகாப்பு மற்றும் மேலாண்மையில் சிறந்த மாவட்டமாக இராண்டாம் இடம் பெற்றுள்ளது. 2022-ம் ஆண்டு மாவட்டம் முழுவதும் உள்ள 5 நகராட்சிகள், 19 பேரூராட்சிகள், 322 கிராம பஞ்சாயத்துகளிலும் மாவட்ட நிர்வாகத்தின் மூலம் பல்வேறு நீர்வள பாதுகாப்பு நடவடிக்கைகளும், ஏரிகள், ஆறுகள், நீரூற்றுகள் பாதுகாப்பு பணிகளும் மற்றும் புனரமைப்பு பணிகள் மேற்கொள்ளப்பட்டன.

மாவட்டத்தின் சிறந்த திட்டமான `நம்ம நாமக்கல் பசுமை நாமக்கல்’ திட்டத்தின் மூலம் 10 லட்சம் மரக்கன்றுகள் நடவு செய்ய இலக்கு நிர்ணயிக்கப்பட்டு மாவட்டம் முழுவதும் நடப்பட்டுள்ளது. மேலும் மாவட்டம் முழுவதும் மழைநீர் சேகரிப்பு தொடர்பாக பல்வேறு விழிப்புணர்வு கூட்டங்கள் நடத்தப்பட்டன. இதன் மூலம் மாவட்டம் முழுவதும் மழைநீர் சேகரிப்பு கட்டமைப்பு சுமார் 2.25 லட்சம் கட்டடங்களில் ஏற்படுத்தப்பட்டுள்ளது. மேலும் 1 லட்சம் மழைநீர் சேகரிப்பு தொட்டிகள் ஏற்படுத்தப்பட்டுள்ளன.

மாவட்டம் முழுவதும் செயற்கை நீர் சேமிப்பு பணிகள் மொத்தமாக 1,713 பணிகள் எடுத்துக் கொள்ளப்பட்டு பண்ணைக் குட்டைகள் அமைத்தல், தடுப்பணைகள், நீர் சேமிப்பு குழாய், அகழி வெட்டுதல், புதிதாக பண்ணைக் குட்டைகள் அமைத்தல் ஆகிய பணிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. மாவட்டதில் உள்ள நீர்நிலைகள் அனைத்தும் மாவட்ட வலைதளத்தில் பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளது. புதியதாக மாவட்டத்தில் கழிவுநீர் கால்வாய் அமைக்கும் பணி 24.72 கி.மீ தூரம் அமைக்கப்பட்டுள்ளது. மாவட்டதில் உள்ள நீர்நிலைகள் மாசுபடாமல் இருப்பதற்கு நீரின் தரத்தை ஆய்வு செய்வதற்கும் நீரின் தர ஆய்வு மையம் அமைக்கப்படுள்ளது.

நம்ம நாமக்கல் பசுமை நாமக்கல்’ திட்டத்தில் மரக்கன்றுகள் நடவு

மாவட்டம் முழுவதும் உள்ள நீர்நிலைகளில் சீமைக் கருவேலமரங்களை அகற்றுவதற்கு பல்வேறு நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு ஏரிகளிலும் நீர்நிலைகளிலும் அகற்றப்பட்டு வருகிறது. மாவட்டம் முழுவதும் உள்ள நீர்நிலைகளில் நவீன தொழில்நுட்பத்தின் (GPS) உதவியுடன் பல ஆக்கிரமிப்புகள் கண்டறியப்பட்டு அகற்றப்பட்டு வருகிறது.

இவ்வாறு மேற்கொள்ளப்பட்டுள்ள பல்வேறு நடவடிக்கைகளால் நாமக்கல் மாவட்டம் முழுவதும் நிலத்தடி நீர்மட்டம் உயந்துள்ளது. நான்கு குறு வட்டங்களில் நிலத்தடி நீர்மட்டம் வகைப்பாடும் மேம்பட்டுள்ளது. இதில் இரண்டு குறு வட்டங்கள் பகுதி மிகை நுகர்வு பகுதியில் இருந்து (Semi-Critical to Safe zone) பாதுகாப்பான பகுதிக்கும், மற்ற இரண்டு குறு வட்டங்கள் அபாயகரமான (Over-Exploited to Critical) பகுதியில் இருந்து மிகை நுகர்வு பகுதிக்கும் நீர்மட்ட வகைப்பாடு மேம்பட்டுள்ளது. மேலும் மற்ற குறு வட்டங்களிலும் கணிசமான அளவு நீர்மட்டம் உயர்ந்துள்ளது. இதன் அடிப்படையில் நமது நாமக்கல் மாவட்டம் மத்திய அளவில் நீர்வள பாதுகாப்பு மற்றும் மேலாண்மையில் சிறந்த மாவட்டமாக இராண்டாம் இடம் பெற்றுள்ளது” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.