புதுடெல்லி: நாட்டில் உள்ள விவசாயிகளுக்கு உர மானியமாக ரூ.1.08 லட்சம் கோடி வழங்குவதற்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது.
பிரதமர் நரேந்திர மோடி தலைமையில் நேற்று டெல்லியில் மத்திய அமைச்சரவைக் கூட்டம் நடைபெற்றது. கூட்டத்தில் பல்வேறு விவகாரங்கள் குறித்து விவாதிக்கப்பட்டு ஒப்புதல் அளிக்கப்பட்டது.
அமைச்சரவைக் கூட்டத்தில் எடுக்கப்பட்ட முடிவுகள் குறித்து மத்திய ரயில்வே அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் செய்தியாளர்களிடம் கூறியதாவது:
நாடு முழுவதும் தகவல் தொழில்நுட்பத்துறையை ஊக்குவிக்க பல்வேறு திட்டங்களை மத்திய அரசு அமல்படுத்தி வருகிறது. இந்நிலையில் இன்று நடைபெற்ற அமைச்சரவைக் கூட்டத்தில் தகவல் தொழில்நுட்பத்துறையின் மேம்பாடு குறித்து விவாதிக்கப்பட்டது.
அதன்படி தகவல் தொழில்நுட்பத்தின் ஹார்டுவேர் பிரிவில் உற்பத்தி சார்ந்த ஊக்கத்தொகையாக (பிஎல்ஐ) ரூ.17 ஆயிரம் கோடியை வழங்க மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது.
6 ஆண்டுகள் வரை…
இதில் லேப்-டாப்கள், டேப்லெட்டுகள், ஒருங்கிணைந்த கம்ப்யூட்டர்கள், சர்வர்கள் தயாரிப்பில் 6 ஆண்டுகள் வரை இந்த ஊக்கத்தொகைத் திட்டம் அமலில் இருக்கும். இதன்மூலம் இந்தத் துறையில் உற்பத்தி ரூ.3.35 லட்சம் கோடியாக அதிகரிக்கும் என எதிர்பார்க்கிறோம். மேலும் அதிகரிக்கும் முதலீடு ரூ.2,430 கோடியாக இருக்கும். இதன்மூலம் 75 ஆயிரம் பேருக்கு நேரடி வேலைவாய்ப்பு கிடைக்கும். இவ்வாறு அவர் கூறினார்.
மத்திய ரசாயனம் மற்றும் உரத்துறை அமைச்சர் மன்சுக் மாண்டவியா கூறியதாவது:
விவசாயிகளுக்கு வரும் காரிஃப் பருவத்தில் ரூ.1.08 லட்சம் கோடி உர மானியம் வழங்கப்படும். மேலும் உரத்தின் விலையை அதிகரிக்கப் போவதில்லை என்றும் மத்திய அரசு முடிவு செய்துள்ளது.
இந்த மானியத் தொகையில் ரூ.70 ஆயிரம் கோடி யூரியாவுக்கும், ரூ.38 ஆயிரம் கோடி டை-அம்மோனியம் பாஸ்பேட்டுக்கும் (டிஏபி) வழங்கப்படும்.
நாட்டில் உள்ள விவசாயிகள் சரியான நேரத்தில் உரத்தைப் பெறுவதும், சர்வதேச சந்தையில் உரத்தின் விலையில் மாறுபாடு ஏற்படும் போதெல்லாம் அந்த விலை உயர்வை விவசாயிகள் தலை மீது ஏற்றாமல் இருப்பதையும் நமது அரசு செய்து வருகிறது. கடந்த ஆண்டு மத்திய அரசு பட்ஜெட்டில் உர மானியத்துக்காக ரூ.2.56 லட்சம் கோடி செலவிடப்பட்டது குறிப்பிடத்தக்கது.
இவ்வாறு அவர் கூறினார்.