'போர்குடி' சர்ச்சை படமல்ல: இயக்குனர் விளக்கம்

11 வில்லேஜர்ஸ் பிலிம் புரொடக்ஷன் மற்றும் யாதவ் பிலிம் புரொடக்ஷன் இணைந்து தயாரித்துள்ள படம் 'போர்குடி'. இதனை நடிகர் ஆறுபாலா இயக்கி உள்ளார். ஆர்.எஸ்.கார்த்திக் மற்றும் அறிமுக நடிகை ஆராத்யா நடித்துள்ளனர். செந்தமிழ் இசையமைத்துள்ள இந்த படத்திற்கு ரமேஷ் ஏழுமலை ஒளிப்பதிவு செய்துள்ளார். அண்மையில் இதன் டீசர் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியது. தீண்டாமை வன்கொடுமை சட்டத்தால் ஒரு குறிப்பிட்ட ஜாதியினர் தொடர்ந்து பாதிக்கப்படுவதாகவும், மற்ற ஜாதிக்கு வழங்கப்படும் இட ஒதுக்கீடுகளால் குறிப்பிட்ட ஜாதியினரில் உள்ள ஏழை மக்கள் முன்னேற முடியாமல் போவதாகவும் அந்த டீசரில் குறிப்பிடப்பட்டது. இது சர்ச்சையை ஏற்படுத்தியது.

இந்த நிலையில் படத்தின் இயக்குனர் ஆறுபாலா கூறியிருப்பதாவது: யதார்த்த சாராம்சத்துடன் நேட்டிவிட்டி அடிப்படையிலான திரைப்படம், தமிழ்த் திரையுலகில் உள்ள அனைத்து தரப்பு விமர்சகர்களையும் பார்வையாளர்களையும் ஈர்க்கத் தவறுவதில்லை. சரியான கதையை ஈர்க்கக்கூடிய மற்றும் பொழுதுபோக்கு அம்சங்களுடன் சரியான முறையில் சொல்லப்பட்டால் வணிக மற்றும் விமர்சன ரீதியாக வெற்றி பெறும் என்பதில் சந்தேகம் இல்லை. இந்தப் படத்தின் யதார்த்தத்திற்காக தயாரிப்பாளர்கள் பல இடங்களைத் தேடி, கடைசியாக சரியான போக்குவரத்தும், மின்சாரமும், குடிநீரும் இல்லாத ஒரு கிராமத்தை கண்டுபிடித்தனர். இந்த கிராமத்தில் இதற்கு முன் எந்த படமும் எடுக்கப்படாததால் படப்பிடிப்புக்கு ஒத்துழைப்பு தர அங்குள்ள மக்கள் முன்வரவில்லை. பின்னர் சமாதானமாகி அங்கு அனைவரும் படப்பிடிப்பின் ஆரம்பம் முதல் இறுதி வரை சிறந்த ஆதரவை வழங்கினர். இது திட்டமிட்டபடி படப்பிடிப்பை முழுமையாக முடிக்க படக்குழுவிற்கு உதவியது.

படப்பிடிப்பின் போது குழு பல சவால்களை எதிர்கொண்டது. குறிப்பாக, தாங்க முடியாத வெப்பம் மற்றும் ஈரப்பதமான சூழ்நிலைகள். இருப்பினும், படக்குழுவில் கிட்டத்தட்ட அனைவருக்கும் இது முதல் படம் என்பதால் சிறந்த அவுட்புட் கொடுக்க வேண்டும் என்ற பாசிட்டிவ் எண்ணம் மற்றும் எனர்ஜியோடு வேலை செய்தனர். இந்தப் படம் எந்த ஒரு சாதியினரையோ அல்லது குறிப்பிட்ட பிரிவினரையோ புண்படுத்தாது, என்கிறார் இயக்குநர் ஆறுபாலா.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.