இம்பால்: மணிப்பூரில் ராணுவத்தினரை இலக்கு வைத்து திட்டமிடப்பட்டிருந்த தாக்குதல் சதி முறியடிக்கப்பட்டுள்ளது. ராணுவத்தினர் மீதான தாக்குதலுக்காக வைக்கப்பட்டிருந்த 3 கிலோ வெடிமருந்து உள்ளிட்டவை பறிமுதல் செய்யப்பட்டன.
மணிப்பூர் மாநிலத்தில் நாகா- குக்கி இன பழங்குடிகள் மற்றும் மைத்தேயி இன மக்களிடையே அண்மையில் பெரும் மோதல் வெடித்தது. மைத்தேயி இன மக்களை பழங்குடி பட்டியலில்- எஸ்டி பட்டியலில் சேர்க்க கடும் எதிர்ப்பு தெரிவித்து இந்த மோதல் நிகழ்ந்தது.
இம்மோதல்களால் மணிப்பூர் மாநிலமே பற்றி எரிந்தது. இன வன்முறைகளில் சிக்கி 60க்கும் மேற்பட்டோர் உயிரிழந்தனர். மணிப்பூர் மாநிலத்தில் ஆயிரக்கணக்கானோர் வீடுகளை இழந்து அகதிகளாகினர்.
மணிப்பூர் மாநிலம்- மியான்மர் நாட்டின் எல்லையான மோரே சிறுநகரில் ஆயிரக்கணக்கான தமிழர்கள் வசிக்கின்றனர். தமிழர்களின் வீடுகள், வணிக நிறுவனங்கள் தீக்கிரையாக்கப்பட்டன. தற்போது மணிப்பூரில் மெல்ல இயல்பு நிலை திரும்பி வருகிறது.
இந்நிலையில் மணிப்பூரில் பாதுகாப்பு படையினர் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது ராணுவத்தினர் மீது தாக்குதல் நடத்துவதற்காக புதைக்கப்பட்டிருந்த வெடிகுண்டு கண்டறியப்பட்டது. 3 கிலோ வெடி மருந்து, 15 எலக்ட்ரிக் டெட்டனேட்டர்களுடான இந்த வெடிகுண்டு பறிமுதல் செய்யப்பட்டது. இதன் மூலம் கிழக்கு இம்பாலில் ராணுவத்தை இலக்கு வைத்து பயங்கரவாதிகள் நடத்த திட்டமிட்டிருந்த பயங்கர சதி முறியடிக்கப்பட்டுள்ளது.