முள்ளிவாய்க்கால் இனப்படுகொலை நினைவேந்தல்- வீரவணக்கம்..வீரவணக்கம்.. சிதம்பரத்தை அதிரவைத்த முழக்கம்!

சிதம்பரம்: இலங்கையில் தமிழீழ தனிநாடு போராட்டத்துக்கான இறுதி யுத்தத்தில் படுகொலை செய்யப்பட்ட லட்சக்கணக்கான தமிழ் உறவுகளுக்கு வீரவணக்கம் செலுத்துகிற முள்ளிவாய்க்கால் இனப்படுகொலை நினைவேந்தல் நிகழ்வு, விடுதலை சிறுத்தைகள் கட்சியின் சார்பாக சிதம்பரத்தில் நேற்று நடைபெற்றது.

இலங்கையில் தமிழர்கள் தாயக நிலப்பரப்பான வடக்கு, கிழக்கு மாகாணங்களை இணைத்து தமிழீழ தனிநாடு உருவாக்க கோரி ஆயுதப் போராட்டம் நடத்தப்பட்டது. தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கத்தின் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரன் தலைமையில் 30 ஆண்டுகளுக்கும் மேலாக நடைபெற்ற இந்த யுத்தம் 2009-ம் ஆண்டு மே 18-ந் தேதியுடன் முடிவுக்கு வந்தது. 2009-ம் ஆண்டு மே மாதத்தில் யுத்தத்தின் இறுதி நாட்களில் மட்டும் பல லட்சக்கணக்கான தமிழர்கள் இலங்கை ராணுவத்தால் படுகொலை செய்யப்பட்டனர்; விடுதலைப் புலிகள் இயக்கமும் தங்களது ஆயுதங்களை மவுனிப்பதாக அறிவித்தது.

ஒவ்வொரு ஆண்டும் மே 17,18 தேதிகளில் உலகத் தமிழர்கள் இறுதி இனப்படுகொலை நிகழ்ந்த முள்ளிவாய்க்கால் இடத்தின் பெயரில் முள்ளிவாய்க்கால் இனப்படுகொலை நினைவேந்தல் நிகழ்ச்சிகளை நடத்தி வருகின்றனர். தமிழ்நாட்டிலும் இந்நிகழ்வுகள் நடைபெற்று வருகின்றன.

இந்த ஆண்டு விடுதலை சிறுத்தைகள் கட்சியின் சார்பாக சிதம்பரத்தில் நேற்று முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் நிகழ்ச்சி நடைபெற்றது. இது தொடர்பாக விசிக தலைவர் தொல். திருமாவளவன் தமது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளதாவது: மே17, முள்ளிவாய்க்கால் இனப்படுகொலை நினைவேந்தல் வீரவணக்கப் பொதுகூட்டம் விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் சார்பில் சிதம்பரத்தில் இன்று நடைபெற்றது. தமிழீழ விடுதலைக் களத்தில் தமது இன்னுயிரை நீத்த போராளிகளுக்கும் பொதுமக்களுக்கும் குழந்தைகளுக்கும் முதியோர்களுக்கும் ஈகைச் சுடர் ஏற்றி எமது செம்மாந்த வீரவணக்கத்தைச் செலுத்தினோம்! இவ்வாறு தொல்.திருமாவளவன் கூறியுள்ளார்.

மே17 இயக்கம்: மே 17 இயக்கத்தின் சார்பாக இன்று சென்னை அருகே மறைமலைநகரில் முள்ளிவாய்க்கால் இனப்படுகொலை நினைவேந்தல் நிகழ்ச்சி நடைபெற உள்ளது. மறைமலைநகரில், 14-ஆம் ஆண்டு தமிழீழ இனப்படுகொலைக்கான நினைவேந்தல் பொதுக்கூட்டம் பாவேந்தர் சாலையில் மே பதினேழு இயக்கம் சார்பாக இன்று மாலை நடைபெறுகிறது. இந்த பொதுக்கூட்டத்தில், மே பதினேழு இயக்கத்தின் ஒருங்கிணைப்பாளர் திருமுருகன் காந்தி, மதிமுக துணைப் பொதுச்செயலாளர் மல்லை சத்யா, விடுதலைத் தமிழ்ப்புலிகள் கட்சியின் தலைவர் குடந்தை அரசன், இளம் வழக்கறிஞர்கள் சங்கத்தின் தலைவர் காசி புதிய ராஜா, தபெதிக சென்னை மாவட்ட தலைவர் குமரன், ஆகியோர் உரையாற்றுகின்றனர்.

Tamilnadu observes 14th Mullivaikkal Remembrance Day

நாம் தமிழர் கட்சி: தூத்துக்குடியில் இன்று மாலை நாம் தமிழர் கட்சியின் சார்பாக முள்ளிவாய்க்கால் இனப்படுகொலை நினைவேந்தல் நிகழ்ச்சி நடைபெறுகிறது. இதில் நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் பங்கேற்க உள்ளார்.


Source Link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.