புதுடெல்லி,
இந்துஜா குழும தலைவர் எஸ்.பி.இந்துஜா என்ற ஸ்ரீசந்த் பர்மானந்த் இந்துஜா நேற்று லண்டனில் காலமானார். அவருக்கு வயது 87. நீண்ட காலமாக நோய்வாய்ப்பட்ட நிலையில் அவர் மறைந்தார். இத்தகவலை இந்துஜா குடும்ப செய்தித்தொடர்பாளர் தெரிவித்தார். இந்துஜாவின் மனைவி மது, கடந்த ஜனவரி மாதம் காலமானார். இவர்களுக்கு ஷானு, வினு என்ற 2 மகள்கள் உள்ளனர்.
சுதந்திரத்துக்கு முன்பு, ஒன்றுபட்ட இந்தியாவின் கராச்சி நகரில் எஸ்.பி.இந்துஜா பிறந்தார். இந்துஜா சகோதரர்கள் 4 பேரில் இவர்தான் மூத்தவர். அவருடைய தந்தை பி.டி.இ்ந்துஜாவும் பெரும் தொழில் அதிபர் ஆவார். கடந்த 1964-ம் ஆண்டு, ராஜ்கபூரின் ‘சங்கம்’ இந்திப்படத்தின் சர்வதேச வினியோக உரிமை பெற்று எஸ்.பி.இந்துஜா, பல லட்ச ரூபாயை குவித்தார்.
லண்டனில் குடியேறிய இந்துஜா சகோதரர்கள், அந்நாட்டின் பெரும் பணக்காரர்களில் ஒருவராக திகழ்ந்தனர். போபர்ஸ் வழக்கில் எஸ்.பி.இந்துஜாவும், அவருடைய 2 சகோதரர்களும் குற்றம் சாட்டப்பட்டனர். 2005-ம் ஆண்டு அவர்கள் வழக்கில் இருந்து விடுவிக்கப்பட்டனர். ஜார்ஜ் புஷ், டோனி பிளேர் உள்ளிட்ட உலக தலைவர்களுடன் எஸ்.பி.இந்துஜா நெருங்கி பழகி உள்ளார்.