விருதுநகர் மாவட்டத்தில் குற்ற வழக்கில் கைதுசெய்யப்பட்ட நபர் ஒருவர், தன்னை வழக்கிலிருந்து காப்பாற்றிக் கொள்வதற்காக, தமிழக வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத்துறை அமைச்சர் கே.கே.எஸ்.எஸ்.ஆர்.ராமச்சந்திரனின் உதவியாளரிடம், ஒரு லட்சம் ரூபாய் கொடுத்தனுப்பியதாகப் பேசியிருக்கும் போன் கால் ஆடியோ வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது.
கடந்த சில நாள்களுக்கு முன்னதாக சட்டவிரோத பட்டாசு தயாரிப்பில் கைதுசெய்யப்பட்ட நபர் ஒருவர், தன்னை வழக்கிலிருந்து காப்பாற்றிக்கொள்ள எண்ணி அரசியல்ரீதியாக முயற்சிகள் மேற்கொண்டிருக்கிறார். அப்போது, அமைச்சர் கே.கே.எஸ்.எஸ்.ஆர்.ராமச்சந்திரனின் உதவியாளர் மூலம் கைது நடவடிக்கையைத் தடுப்பதற்காக, சம்பந்தப்பட்ட நபரிடமிருந்து ஒரு லட்சம் ரூபாயை யாரோ பெற்றுச் சென்றதாகக் கூறப்படுகிறது.
இந்த நிலையில் விருதுநகர் மாவட்டத்தில் பரபரப்பை ஏற்படுத்தியிருக்கும் அந்த ஆடியோவில், கைதுசெய்யப்பட்ட நபர், “அண்ணே… ஒரு லட்ச ரூபாய் வாங்கிட்டாங்கன்ணே. அமைச்சர் கே.கே.எஸ்.எஸ்.ஆர். பி.ஏ கேட்டதாகச் சொல்லி ஒரு லட்ச ரூபாய் வாங்கிட்டுப் போயிட்டாங்க அண்ணே. ஆனா இப்ப கேட்டா, நான் சொல்லல… நீ சொல்லலன்னு, சொல்றாங்க அண்ணே. கடைசில என்னை ஜெயிலில் தள்ளிருவாங்கபோல. எனக்கு இப்பவே படபடன்னு வருது. இப்ப அருப்புக்கோட்டை ரோட்டுல ஜட்ஜு வீட்டுக்கு கூட்டிட்டுப் போயிட்டுருக்காங்க அண்ணே. ஒரு லட்சம் வாங்கிட்டு போய்ட்டாங்க அண்ணே…” என பதற்றத்துடன் பேசுவதாக அந்த ஆடியோ முடிவடைகிறது.
இந்த விவகாரம் தொடர்பாக விளக்கம் பெறுவதற்கு வருவாய்துறை அமைச்சர் கே.கே.எஸ்.எஸ்.ஆர்.ராமச்சந்திரனை தொடர்புகொண்டோம். ஆனால், போனை எடுத்துப் பேசிய அவரின் உதவியாளர், “நீங்கள் ஜெயராஜிடம் கேட்டுப் பேசுங்கள்” என மற்றொரு உதவியாளரைக் கைக்காட்டினார். அவரைத் தொடர்புக்கொண்டதற்கு எந்த பதிலும் அளிக்கவில்லை.
பின்னர் நம்மைத் தொடர்புகொண்டு பேசிய அமைச்சர் கே.கே.எஸ்.எஸ்.ஆர்.ராமச்சந்திரன், “இதுல பி.ஏ-க்கு என்ன சம்பந்தம் இருக்கு. கலெக்டர், எஸ்.பி-கிட்ட பேசும் ஒரே ஆள் நான் மட்டுந்தான். எனது தரப்பில் வேறுயாரும் பேசமாட்டார்கள்.
அதுபோல, பட்டாசு விபத்துகளைத் தடுக்கவும், விதிமீறலில் ஈடுபடுபவர்கள்மீது பாரபட்சமின்றி நடவடிக்கை எடுக்கவும் அரசு உத்தரவிட்டிருக்கிறது. அதன்படி, அடுத்தடுத்து நடந்த பட்டாசு விபத்துகளில் தவறு செய்த உரிமையாளர்கள், ஃபோர்மேன்கள் கைதுசெய்யப்பட்டிருக்கின்றனர். பி.ஏ-க்களில் யார் பணம் வாங்கினார்கள் எனப் பெயரைக்கூட சொல்லாமல், யாரோ மூன்றாம் நபர் போனில் பேசியதற்கு, எப்படி நாம் பொறுப்பாக முடியும்” என விளக்கமளித்தார்.