வருகிற 20ம் தேதி கர்நாடகா முதல்வர் பதவி ஏற்பு விழாவில் கலந்து கொள்ள திருமாவளவனுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.
கர்நாடகாவில் கடந்த மே 10ம் தேதி சட்டப்பேரவை தேர்தல் நடத்தப்பட்டது. மொத்தம் உள்ள 224 தொகுதிகளுக்கும் ஒரே கட்டமாக தேர்தல் நடத்தப்பட்டு, கடந்த 13ம் தேதி முடிவுகள் அறிவிக்கப்பட்டது. 113 தொகுதிகளில் வென்றாலே ஆட்சியை அமைக்க முடியும் என்ற நிலையில், 135 இடங்களை கைப்பற்றி காங்கிரஸ் கட்சி வெற்றி வாகை சூடியது. தென் மாநிலங்களில் ஆட்சியில் இருந்த ஒரே மாநிலத்தையும் பாஜக இழந்தது.
கர்நாடகாவில் பல தொகுதிகளில் தமிழர்கள் பெரும்பான்மையாக வசிப்பதால், அத்தகைய தொகுதிகளில் வெற்றிகளை தீர்மானிக்கு சக்தியாக தமிழர்கள் உள்ளனர். எனவே தமிழர்களின் வாக்குகளை கவர பாஜக சார்பில் அண்ணாமலை தேர்தல் இணை பொறுப்பாளராக நியமிக்கப்பட்டு களமிறக்கப்பட்டார். அதேசமயம் காங்கிரஸ் கூட்டணி கட்சி சார்பில் விடுதலை சிறுத்தைகள் கட்சி சார்பில் திருமாவளவனை களமிறக்கினார் அம்மாநில காங்கிரஸ் தலைவர் டிகே சிவக்குமார்.
40க்கும் மேற்பட்ட தொகுதிகளில் திருமாவளவனின் ஆதரவு தேவைப்பட்டதால், அவரை காங்கிரஸ் கட்சி களமிறக்கியது. இந்த தொகுதிகளில் எல்லாம் தமிழர்கள் குறிப்பாக பட்டியலின மக்கள் அதிகமாக வசித்து வருகின்றனர். அதைத் தொடர்ந்து பெங்களுருவில் உள்ள காந்தி நகர், சாந்தி நகர், சிவாஜி நகர் உள்ளிட்ட 10க்கும் மேற்பட்ட தொகுதிகளில்
தீவிரமாக வாக்குசேகரித்தார். காங்கிரஸ் கட்சியின் இமாலய வெற்றிக்கு தன்னால் இயன்ற வகையில் திருமாவளவன் பணியாற்றினார்.
செல்லும் இடங்களில் எல்லாம், பாஜக கிழித்து தொங்கவிட்டார். இதில் குறிப்பிடப்பட வேண்டிய இன்னொரு விஷயம் என்னவென்றால், கர்நாடகா, தெலங்கானா மற்றும் ஆந்திராவில்
வின் கிளை அலுவலகங்கள் துவக்கப்பட்டு, அங்கு அரசியல் செய்து வருகிறார் திருமாவளவன். அந்த வகையில் கர்நாடகா தேர்தலில் விசிக சார்பில் தேர்தலை சந்திக்க அம்மாநில நிர்வாகிகள் முடிவுசெய்தனர். இருப்பினும் இந்த தேர்தலில் வேண்டாம், அது காங்கிரஸுக்கு வரும் வாக்குகளை பிரித்துவிடும் என திருமாவளவன் கூறியிருந்ததும் குறிப்பிடதக்கது.
இந்தநிலையில் கர்நாடகாவில் முதல்வராக சித்தராமையா வருகிற 20ம் தேதி பதவி ஏற்க உள்ளார். அவரின் பதவி ஏற்பு விழாவில் கலந்து கொள்ள காங்கிரஸ் கட்சியுடன் நட்புறவில் உள்ள எதிர்கட்சி தலைவர்களுக்கு அழைப்பு விடப்பட்டு வருகிறது. அந்தவகையில் தமிழ்நாடு முதலமைச்சர் முக ஸ்டாலினுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. இந்தநிலையில் விசிக தலைவர் திருமாவளவனுக்கும் முதல்வராக பதவி ஏற்கும் சித்தராமையா அழைப்பு விடுத்துள்ளார். பதவி ஏற்பு விழாவிற்கு அழைப்பு விடுத்ததற்கு நன்றி தெரிவித்து திருமாவளவன் தனது ட்விட்டரில் பதிவிட்டுள்ளார்.