புதுடில்லி, இரண்டு ஆண்டுகளாக பயன்பாட்டில் இல்லாத கணக்குகளை வரும் டிசம்பர் மாதம் முதல் நீக்க ‘கூகுள்’ நிறுவனம் முடிவு செய்துள்ளது.
கூகுள் நிறுவனம் துவங்கப்பட்டதில் இருந்து, இணையதளவாசிகள் பல விதங்களில் பயனடைந்து வருகின்றனர்.
மின்னஞ்சல் அனுப்புவது, புகைப்படங்களை சேமிப்பது, திரைப்படங்கள், பாடல்கள் போன்றவற்றை பதிவிறக்கம் செய்வது, யு டியூப் பயன்படுத்துவது, ஆவணங்களை சேமிப்பது என கூகுளின் அத்தனை அம்சங்களும் அனைவரையும் கவர்ந்துள்ளன.
கூகுள் கணக்கு துவங்குபவர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் உயர்ந்து வரும் நிலையில், அவை பயன்படுத்தப்படாமல் உள்ள சூழலும் அதிகரித்து வருகிறது. இந்நிலையில், இரண்டு ஆண்டுகளாக பயன்பாட்டில் இல்லாத கணக்குகளை நீக்க அந்த நிறுவனம் முடிவு செய்து உள்ளது.
இது குறித்து கூகுள் நிறுவனம் கூறியுள்ளதாவது:
இரண்டு ஆண்டுகளாக ஒரு கணக்கு பயன்படுத்தப்படாமல் இருந்தால், அது அடையாளத் திருட்டுக்கு வழி வகுக்கும். அந்த கணக்கு யாரோ ஒருவரால் தவறாக பயன்படுத்தப்படும்.
ஆகையால், இரண்டு ஆண்டுகளாக பயன்படுத்தப்படாமல் உள்ள கணக்குகளை வரும் டிசம்பர் மாதம் முதல் நீக்க முடிவு செய்யப்பட்டு உள்ளது.
அவ்வாறு நீக்கப்பட்டால், மின்னஞ்சல் முகவரி, ஜி – மெயில் செய்திகள், காலண்டர் நிகழ்வுகள், கூகுள் டிரைவ், கூகுள் புகைப்படங்கள், யு டியூப், டாக்ஸ் எனப்படும் பணியிட கோப்புகள் போன்றவற்றை கணக்காளர்கள் பயன்படுத்த முடியாது. தனிப்பட்ட கணக்குகளுக்கு மட்டுமே இந்தக் கொள்கை பொருந்தும். நிறுவனங்கள், பள்ளிகள் அல்லது வணிகங்களுக்கான கணக்குகள் இதனால் பாதிக்கப்படாது.
ஒரு கணக்கை நீக்குவதற்கு முன், அதன் மின்னஞ்சல் முகவரி மற்றும் மீட்பு மின்னஞ்சல் முகவரி ஆகிய இரண்டிற்கும் அது தொடர்பான அறிவிப்புகள் சில மாதங்களுக்கு அனுப்பப்படும்.
அவ்வாறு எச்சரித்தும், கணக்கு பயன்படுத்தப்படாவிட்டால், அதை நீக்குவதற்கான நடவடிக்கை துவங்கும்.
கணக்கு செயல்பாட்டில் இருக்க வேண்டுமென்றால், கூகுளின் ஏதாவது ஒரு சேவையில், இரண்டு ஆண்டுகளுக்கு ஒரு முறை பயன்பாட்டில் இருத்தல் அவசியம்.
இவ்வாறு கூகுள் நிறுவனம் கூறியுள்ளது.
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்