Doctor Vikatan: வெயிலில் அலைந்து கழுத்து மற்றும் கைகள், கால்கள் கறுத்துவிட்டன. இதை பழைய நிறத்துக்குக் கொண்டுவர முடியுமா? சன் ஸ்கிரீன் உபயோகித்தும் இப்படி ஆகிறது. என்ன செய்வது?
பதில் சொல்கிறார், சென்னையைச் சேர்ந்த அரோமாதெரபிஸ்ட் கீதா அஷோக்
சன் ஸ்கிரீன் உபயோகித்தும் சருமம் கருத்துப்போகிறது என்றால் நீங்கள் உபயோகிக்கும் சன் ஸ்கிரீனின் தன்மையைப் பார்க்க வேண்டும். அதில் உள்ள எஸ்.பி.எஃப் அளவு போதுமானதாக இல்லாமல் இருப்பது ஒரு காரணமாக இருக்கலாம்.
எஸ்.பி.எஃப் 15 அளவுள்ளதை உபயோகிக்கிறீர்கள் என்றால் 45 நிமிடங்களுக்குப் பிறகு மீண்டும் சன் ஸ்கிரீன் உபயோகிக்க வேண்டும். எத்தனை மணி நேரம் வெயிலில் இருக்கிறோம் என்பதற்கேற்ப எஸ்.பி.எஃப் அளவு பார்த்து, சன் ஸ்கிரீன் வாங்கப்பட வேண்டும்.
சிலர் காலையில் சன் ஸ்கிரீன் உபயோகித்துவிட்டு, மாலை வரை அத்துடனேயே வெயிலில் அலைவார்கள். அது பலன் தராது. கை,கால்கள் கருத்துப் போவதாகக் குறிப்பிட்டுள்ளீர்கள். நீண்ட நாள்களாக, நீண்ட நேரம் வெயிலில் அலைவதால் ஏற்படும் இந்தப் பிரச்னை, மங்கு பாதிப்பில் கொண்டு விடலாம். டூ வீலர் ஓட்டுவோர், குடை போன்ற எந்தப் பாதுகாப்பும் இன்றி வெயிலில் நடமாடுவோருக்கு வெளியே தெரியும் உடல் பகுதிகள் நிச்சயம் கருத்துப்போகும்.
சருமம் கருத்துப்போவதை அலட்சியப்படுத்தாமல் உடனுக்குடன் கவனித்தால், அதை ஒரிஜினல் நிறத்துக்குக் கொண்டு வரலாம். மருந்துக் கடைகளில் கேலமைன் ஐபி லோஷன் என கிடைக்கும்.
காலை முதல் மாலை வரை வெயிலில் அலைந்துவிட்டு வீடு திரும்பியதும், இந்த கேலமைன் லோஷனில் 10 துளிகள் எடுத்து அதை 2 சிட்டிகை பேக்கிங் சோடாவில் கலந்து நுரைத்து வரும்போது சருமத்தின் கருத்த பகுதிகளில் தடவி, காய விடவும். பிறகு கழுவினால் வெயிலால் ஏற்பட்ட கருமை நீங்கிவிடும்.
ஓட்ஸை பொடித்து காய்ச்சாத பாலில் கலந்து வைத்துக் கொள்ளவும். அது நொதித்ததும் 10 சொட்டு எலுமிச்சைச் சாறு, ஒரு சிட்டிகை பேக்கிங் சோடா கலந்து சருமத்தில் தடவினாலும் கருமை நீங்கும். லேசான கருமை என்றால் இதிலேயே நன்றாகச் சரியாகும்.
எந்தவிதமான ஃபேஸ் பேக்கையும் கலந்த உடனே முகத்தில் தடவுவதைவிட, கலந்து வைத்து 2 – 3 மணி நேரம் கழித்து உபயோகித்தால் பலன் அதிகமாகும். இதை கவனத்தில் கொள்ளவும்.
வெயிலால் ஏற்பட்ட கருமையை உடனுக்குடன் கவனித்து சரிசெய்துவிடுங்கள். அலட்சியப்படுத்தினால் நிரந்தர கருமையாக மாறிவிடும். அக்னி நட்சத்திர வெயிலுக்கெல்லாம் சன் ஸ்கிரீன் பலனளிக்காது. சன் பிளாக் தேவை.
கண்ணாடியில் கறுப்பு பெயின்ட் அடித்தால் சூரிய ஒளி எப்படி ஊடுருவாதோ, அது போன்றது தான் சன் பிளாக். அதை எஸ்.பி.எஃப் 30 , அக்வா பேஸ்டு ரகமாக பார்த்துத் தேர்வு செய்தால் எல்லோருக்கும் பொருந்தும்.
உங்கள் கேள்விகளை கமென்ட் பகுதியில் பகிர்ந்து கொள்ளுங்கள்; அதற்கான பதில்கள் தினமும் விகடன் இணையதளத்தில் #DoctorVikatan என்ற பெயரில் வெளியாகும்.