நடிகர்கள்: வின் டீசல், ஜேசன் மோமோவா, ஜான் சினா, பிரை லார்சன், கால் கடோட்இசை: பிரையன் டைலர்இயக்கம்: லூயிஸ் லெட்டரியர்நேரம்: 2 மணி நேரம் 21 நிமிடங்கள்
லாஸ் ஏஞ்சல்ஸ்: டிரான்ஸ்ஃபார்மர் படங்களை இயக்கிய இயக்குநர் லூயிஸ் லெட்டரியர் இயக்கத்தில் வின் டீசல், ஜேசன் மோமோவா, மிட்செல் ரோட்ரிகஸ், பிரை லார்சன், கால் கடோட், ஜேசன் ஸ்டாதம் என படத்தில் நடித்துள்ள நடிகர்களின் பெயர்களை மட்டும் சொல்லிக் கொண்டு போனாலே இந்த விமர்சனம் முடிந்து விடும்.
அத்தனை பேருக்கும் இன்ட்ரோ ஷாட், ஆக்ஷன், சென்டிமென்ட், பேக்ஸ்டோரி, ஃபைனல் டச் கொடுத்து இப்படியொரு பிரம்மாண்ட படத்தை இயக்கியதற்காகவே இயக்குநரை பாராட்டலாம்.
ஆனால், வழக்கமாக பல ஹாலிவுட் படங்களில் இதெல்லாம் சர்வ சாதாரணம் தானே படமாக ஃபாஸ்ட் எக்ஸ் பந்தயம் அடித்ததா? இல்லையா? என்கிற முழுமையான விமர்சனத்தை இங்கே பார்க்கலாம் வாங்க!
ஃபாஸ்ட் எக்ஸ் கதை: தனது தந்தையின் மரணத்துக்கு காரணமாக டாம் (வின் டீசல்) மற்றும் அவரது குடும்பத்தை பழிவாங்க டான்டே (ஜேசன் மோமோவா) செய்யும் மடத்தனமான விபரீத விளையாட்டுகளும் அதை முறியடித்து ஹீரோ டாம் மற்றும அவரது குடும்பத்தினர் பிழைத்தார்களா? இல்லையா? என்பது தான் ஃபாஸ்ட் எக்ஸ் முதல் பாகத்தின் கதை. இந்த படத்தை மட்டும் 3 பாகங்களாக எடுத்து ஃபாஸ்ட் அண்ட் ஃபியூரியஸ் கதைக்கு எண்ட் கார்டு போட முடிவு செய்துள்ளனர்.

ஃபாஸ்ட் எக்ஸ் எப்படி இருக்கு?: 10வது பாகத்திலும் பக்கவாக டாம் கதாபாத்திரத்தில் கர்ஜிக்கிறார் வின் டீசல். ஒரே ஒரு கார் விபத்தில் இந்த படத்தில் நடித்த பால் வாக்கர் மரணித்த நிலையில், எத்தனை விபத்துகள், வானத்தில், கடலுக்குள், விவேகம் படத்தில் அஜித் குதிப்பாரே அது போன்ற டேமுக்குள் கார் ஓட்டிக் கொண்டு செல்வது என நம்ப முடியாத காட்சிகளை பிரம்மாண்ட திரையில் பிரம்மாண்ட முறையில் கொண்டு வந்து கூஸ்பம்ப்ஸ் கொடுக்கின்றனர்.
வாடிகன் நகரத்தையே காலி செய்ய ஒரு பெரிய வெடிகுண்டு பாமை வில்லன் ஏற்பாடு செய்து உருட்டி விட அதில் இருந்து அந்த நகரத்தை ஹீரோ டாம் தனது குடும்பத்தினரை கொண்டு எப்படி முறியடிக்கிறார் என்கிற அந்த பிரம்மாண்டமான கார் சேஸிங் ஆக்ஷன் சீன் மிரட்டுகிறது.

விஜய், அஜித், பாலய்யா படங்களை பார்த்தால் ஒருத்தன் எப்படி இத்தனை பேரை அடிக்க முடியும் சூப்பர் ஹீரோ படம் இல்லையே என விமர்சிப்பவர்கள் ஃபாஸ்ட் எக்ஸ் படத்தை பார்த்தால் என்ன சொல்வார்கள் ஹாலிவுட்டிலும் சூப்பர் ஹீரோ அல்லாத சூப்பர் ஸ்டார்கள் நடிக்கும் படங்கள் எல்லாமே லாஜிக் இல்லா மேஜிக் தான்.
பிளஸ்: ஃபாஸ்ட் எக்ஸ் படத்தில் நொடிக்கு நொடி புதிய நடிகர்கள் மற்றும் முந்தைய சீசன்களில் இடம்பெற்ற கால் கடோட், ஜேசன் ஸ்டேதம் உள்ளிட்ட நடிகர்களின் வருகை. விஎஃப்எக்ஸ் என்றே தெரியாத அளவுக்கு பல மிரட்டலான காட்சிகள், கிராவிட்டிக்கு எதிராக செயல்படும் சண்டைக் காட்சிகள், நடிகர்களின் மிரட்டலான நடிப்பு, நொடிக்கு நொடி மாறும் வெளிநாட்டு லொகேஷன் என திரையில் ரசிகர்களுக்கு செம விருந்து கொடுத்துள்ளனர்.

அதற்காக இசையமைப்பாளர், ஒளிப்பதிவாளர், எடிட்டர், விஎஃப்எக்ஸ் டீம் என இயக்குநரின் கார்ட்டூன் டைப் ஐடியாக்களுக்கு டெக்னிக்கல் டீம் உயிர் கொடுத்திருப்பது படத்திற்கு பெரும் பலமாக பார்க்கப்படுகிறது.
மைனஸ்: டாமின் குடும்பத்தை வில்லன் ஜேசன் மோமோவாவிடம் இருந்து காப்பாற்றுவது தான் படத்தின் ஹைலைட் என்றாலும், அடிக்கடி வாரிசு படம் போல நமக்கிருப்பது ஒரே ஒரு குடும்பம், எல்லாரும் ஒண்ணா இருக்கணும் என நெஞ்சை நக்கும் காட்சிகளும், திணிக்கப்படும் காமெடிக்களும் படத்தின் மைனஸாக பார்க்கப்படுகிறது.

திரைக்கதையிலும் பெரிதாக எந்தவொரு புத்திசாலித்தனத்தையும் செய்யாமல் பிரம்மாண்ட ஆக்ஷன் சீன்களை மட்டுமே எடுத்து ஒட்ட வைத்துள்ள இந்த ஃபாஸ்ட் எக்ஸ் படம் முந்தைய ஃபாஸ்ட் 8 மற்றும் 9 படங்களை விட சிறப்பாக வந்துள்ள நிலையில், ரசிகர்கள் தியேட்டரில் ஆரவாரம் செய்கின்றனர்.
அடுத்த பார்ட்டுக்கான லீடாக வரும் எண்ட் கிரெடிட் காட்சியும் ரசிகர்களை உற்சாகத்தில் ஆழ்த்துகிறது. ஃபாஸ்ட் எக்ஸ் – கண்மூடித்தனம்!