புதுடில்லி :”நவீன மருத்துவம் மற்றும் பாரம்பரிய மருத்துவ முறைகளை ஒருங்கிணைப்பதன் வாயிலாக, சிறந்த மருத்துவ சேவையை அளிக்க முடியும். இதற்காக ஒருங்கிணைந்த மருத்துவக் கொள்கையை உருவாக்கும் முயற்சி நடந்து வருகிறது,” என, மத்திய சுகாதாரத் துறை அமைச்சர் மன்சுக் மாண்டவியா தெரிவித்தார்.
மத்திய ஆயுஷ் அமைச்சகத்தின் சார்பில், இரண்டு நாள் தேசிய மாநாடு புதுடில்லியில் நடக்கிறது. இதை, மத்திய சுகாதாரத் துறை அமைச்சர் மன்சுக் மாண்டவியா, மத்திய ஆயுஷ் அமைச்சர் சர்பானந்த சோனாவால் நேற்று துவக்கி வைத்தனர்.
இதில், பல மாநில சுகாதார அமைச்சர்களும் பங்கேற்றனர்.
நிகழ்ச்சியில் மன்சுக் மாண்டவியா பேசியதாவது:
நவீன மருத்துவத்துடன், நம் பாரம்பரிய மருத்துவ முறைகளையும் ஒருங்கிணைக்க, பிரதமர் நரேந்திர மோடி தொடர்ந்து வலியுறுத்தி வருகிறார்.
இந்த இரண்டு மருத்துவ முறைகளையும் ஒருங்கிணைக்கும்போது, நம் மருத்துவ சேவை மேலும் சிறப்பானதாக விளங்கும். இதன் வாயிலாக நம் நாட்டுக்கு மட்டுமல்லாமல், உலகத்துக்கே சிறந்த பலன் கிடைக்கும்.
இதற்காக ஒருங்கிணைந்த மருத்துவக் கொள்கையை வகுக்கும் முயற்சி நடந்து வருகிறது.
இவ்வாறு அவர் பேசினார்.
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement